ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஒரு அறைகூவல் என்ற கடிதத்தை படித்து விட்டு ஒரு தோழர் எழுப்பிய கேள்வி
தோழர்,
அமைப்பை உடைப்பது என்பது மத்தியத்துவத்திற்கு எதிராக வேலை செய்வதாகாதா? உதிரிகளாக ஆவது எந்த பயனும் தராதே, தோழர்?
வேறு எந்த சரியான அமைப்பையும் முன்வைக்காமல் இருக்கும் அமைப்பை உடைப்பது சரியா?
பதில் :
அன்பார்ந்த தோழரே!
உங்களின் ஏக்கமும், தவிப்பும் சரியானதுதான். நீங்கள் மட்டுமல்ல சி.பி.ஐ,.சி.பி.ஐ.[எம்] போன்ற பெரிய கட்சிகளிலும் மேலும் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மா-லெ அமைப்புகளிலும் உள்ள எல்லா தோழர்களும் அமைப்பில் உள்ள தவறுகளை எதிர்த்து போராடுவதே தவறானது என்று கருதுகிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டு கால இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் இந்தக் கருத்து நம்மிடையே புரையோடிக் கிடக்கிறது.
மார்க்சிய அமைப்பு என்பது அதன் கிளைகளின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் எண்ணிக்கையாக மட்டும் இல்லை. தலைமை என்பது நிர்வாகத்திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதில்லை.
ஒரு சரியான மார்க்சிய-லெனிய அமைப்பிற்கு அடிப்படையானது புரட்சி பற்றிய கோட்பாடு. மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம். புரட்சி பற்றிய கட்சியின் கோட்பாட்டை சமூக நடைமுறையோடு பொருத்தி பரிசீலிப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் மூலம் கோட்பாட்டை செழுமைப்படுத்த வேண்டும், நிரூபிக்க வேண்டும். இவ்வாறு செய்யத் தவறும் எவரும், இன்னும் மோசமாக அத்தகைய பரிசீலனையையே நடத்தத் தவறும் எவரும், மார்க்சிய அமைப்பாக இருக்க முடியாது.
தேர்வில் கலந்து கொள்ளும் பொறுப்பும், அதில் தோல்வியடைந்தால் அதை ஒப்புக்கொள்ளும் நேர்மையும் உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே, தமது தோல்விக்கான காரணிகளை ஆய்ந்தறிந்து, தவறுகளை களைந்து இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.
இதற்கு மாறாக தவறுகளை மூடி மறைத்து கொள்வதும், தவறுகளை பரிசீலிப்பது தமது கௌரவத்தை குறைத்து விடும் என்று கருதுவதும், அது பற்றி கேள்வி எழுப்பும் எவரையும் தமக்கு சவால் விடுபவர்களாக பார்ப்பதும் சொத்துடைமை வர்க்கப் பண்பே அன்றி பாட்டாளி வர்க்க பண்புகளில்லை. அப்படி செயல்படும் ஒரு அமைப்பும் பாட்டாளி வர்க்க அமைப்பாக இருக்க முடியாது.
நமது தலைமைகள் தாங்கள் வகுத்துக் கொண்ட கோட்பாட்டை நடைமுறையில் நிரூபிக்க தவறும் போது, தேங்கிப் போகும் போது அந்தத் தலைமையை கேள்விகளுக்கு உட்படுத்துவதும், நிராகரிப்பதுமே ஆரோக்கியமானதும், விஞ்ஞான பூர்வமானதுமானதும் ஆகும். அதுதான் சரியான ஜனநாயக மத்தியத்துவ நடைமுறை.
இவ்வாறு அமைப்பு செயல்பாடுகளையும் கோட்பாட்டையும் இணைப்பதையும் அதை பரிசீலிப்பதையும் நமது தலைமைகள் நேர்மறையில், விஞ்ஞானபூர்வமாக அணுகியிருந்தால், அமைப்பின் செயல்பாடுகளை பரிசீலித்து விமர்சிக்கும் ஜனநாயகத்தை அணிகளுக்கு வழங்கியிருந்தால், ஜனநாயக மத்தியத்துவத்தை கடைப்பிடித்து அடுத்தடுத்து நிகழ்ந்த உடைப்புகளை தவிர்த்திருக்கலாம். எனவே உடைப்புகளுக்கான வேர்கள் தலைமைகளின் சித்தாந்த ஓட்டாண்டித்தனத்திலும், பாட்டாளி வர்க்க விரோத ஜனநாயக மத்தியத்துவ மறுப்பிலுமே புதைந்து கிடக்கிறது.
நமது தலைமைகளின் இப்பாட்டாளி வர்க்க விரோத பண்புகளுக்கான அடிப்படை இச்சமூகத்திலேயே ஆழப்புதைந்து கிடக்கிறது. இவ்வேர்களை அடையாளம் கண்டு முற்றாக பிடுங்கி எறியாமல், அடுத்தடுத்து சிறு சிறு குழுக்களாக பிளவுறுதல் என்பது கிளைகளை வெட்டுவதேயாகும். உடைப்புகள் சாராம்சத்தில் தோல்விகளேயானாலும் அவை தவிர்க்க இயலாதவைகளாகி விட்டன..
ஆனால், இத்தோல்விகளே வெற்றிக்கான படிக்கட்டுகள். இவற்றை நமக்கான படிப்பினைகளாக்குவோம்! சமூக மாற்றம் என்ற நமது இலக்கை நோக்கி முன்னேறுவோம்!