கேள்வி:
======
வணக்கம் தோழர்.
கீற்று இணையத்தில் ம.க.இ.க. மற்றும் தோழமை அமைப்பு தோழர்களுக்கு ஓர் அறைகூவல் என்ற கட்டுரையை வாசித்தேன். நானும் முன்னாள் பு.மா.இ.மு தோழர்தான்.
இந்திய வரலாற்றை மீண்டும் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்து புரட்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சொன்னதில் நான் உடன்படுகிறேன். இன்றைய அவசியமும் அதுவே. அனுபவங்களிலிருந்து பரிசீலித்து நாம் தவறவிட்டதை,பார்க்க தவறிய பார்வையை விமர்சன-சுயவிமர்சன கண்ணோட்டத்தோடு அணுகி இந்தியாவில் பரந்துபட்ட பாட்டாளிவர்க்க புரட்சியை நடத்த வேண்டிய கடமையை தோழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும்.
எனக்கு ஒரு கேள்வி:
தற்போதைய கட்டமைப்பு நெருக்கடி என்கிற செயல்தந்திரம் தவறானது என்பதே தங்கள் கட்டுரை வழி நான் புரிந்து கொண்டது.
அது சரியென்றால் எந்த வகையில் அந்த முடிவுக்கு வந்தீர்கள் என்கிற விளக்கத்தை அளிக்க முடியுமா தோழர்?
பதில்
====
“கட்டமைப்பு நெருக்கடியும் புதிய தாக்குதல் செயல்தந்திரமும், மக்கள் அதிகாரம்” என்ற இந்த செயல்தந்திரம் என்பது கற்பனையானது. இன்றைய புறநிலை மற்றும் அகநிலை யதார்த்தத்தின் படி தற்போது இப்படியொரு செயல்தந்திரத்தை வகுப்பதற்கான எந்த அரசியல், அமைப்பு அடிப்படையும் இல்லை.
மக்கள் அதிகாரத்தின் தோழமை அமைப்புகள் முன் வைத்து வரும் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற இலக்குக்கும், நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்ற போர்தந்திரத்துக்கும் இந்த செயல் தந்திரத்துக்கும் பெருமளவு முரண்பாடு உள்ளது. இந்தியாவில் புரட்சியின் தன்மை குறித்தும், பாதை குறித்தும் ஆன இந்த முடிவுகள் சரியானவையா என்ற விவாதம் ஒரு புறம் இருக்க, அவர்களே வகுத்து பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் கோட்பாடுகளுக்கு விரோதமான வகையில் இந்த செயல் தந்திரம் முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. மக்கள் அதிகாரத்தின் “கட்டமைப்பு நெருக்கடியும் புதிய செயல் தந்திரமும் வெளியீட்டின் 104 வது பக்கத்தில்
“16. அரசியல் மாற்று பற்றி சிலக் குறிப்புகள்” என்ற தலைப்பில் “நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகுநிலை பெற்றிருந்த விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டு நகரமயமாக்கல் விரைந்து நடக்கிறது. கிராமப் பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அலைஅலையாக முன்னேறிய மாநிலங்களுக்குப் புலம் பெயர்வதும் பெரிய அளவில் நடக்கிறது. இது மக்கள் வாழ்விலும் சமூக உறவுகளிலும் பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
“நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகுநிலை பெற்றிருந்த விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுள்து.” என்று குறிப்பிட்டுள்ளது பற்றி.
இந்திய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முற்றாக ஆய்வு செய்து அதைப் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு இன்னும் அமைப்பு வரவில்லை. அப்படி ஒரு முடிவுக்கு வராமலேயே மிகுநிலை பெற்றிருந்த விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று இப்படி கூறுவதற்கு தலைமைக்கு உரிமை இல்லை.
“கிராமப்புறங்களை விட்டு பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நகர்ப் புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்” என்பது பற்றி.
அவ்வாறு இடம் பெயரும் அவர்களின் வர்க்க நிலை என்னவாக மாறிவிட்டது? விவசாயி என்ற நிலையிலிருந்து தங்களை சுயமான தொழிலாளி என்று பார்க்கும் வர்க்க நிலைக்கு அவர்கள் மாறிவிட்டனர் என்று கருதுகின்றோமா? அவர்களின் வர்க்க நிலை, அரசியல், பண்பாடு எல்லாம் மாறிவிட்டது என்று கருதுகின்றோமா?
“பின்தங்கிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அலை அலையாக முன்னேறிய மாநிலங்களுக்கு இடம் பெயர்வதும் பெரிய அளவிற்கு நடக்கின்றது” என்பது பற்றி.
முன்னேறிய மாநிலம் என்று குறிப்பிடப்படும் மாநிலங்கள் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்து முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற நிலைக்கு மாறிவிட்டனவா என்பது தெளிவுபடுத்தப்படாமலேயே இப்படிக் கூறப்படுவது தவறாகும்.
தலைமை ‘இந்திய சமூகம் விவசாய உற்பத்தியிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிவிட்டது’ என்ற மன நிலைக்கு வந்துவிட்டு, அந்தக் கண்ணோட்டத்திலிருந்து இந்த விஷயத்தை அணுகுவதாகத் தோன்றுகின்றது.
இந்திய உற்பத்தி முறையை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தும் அதை நிறைவேற்றாமல் காலம் தள்ளுவதற்கும் இந்த அடிப்படைதான் காரணமாக இருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் இப்படி கருதவேண்டி இருக்கிறது என்றால் இந்திய உற்பத்தி முறையை மீண்டும் ஆய்வு செய்து நிறுவாமலேயே ஒரு புதிய செயல்தந்திரத்தை தலைமை முன் வைத்துள்ளது.
அதாவது இந்திய சமூகத்தின் முரண்பாடுகளில் பிரதான முரண்பாடு நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பதாக தீர்மானித்து அமைப்பு 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த முரண்பாட்டின் முதன்மைக் கூறின் தற்போதைய வர்க்கத் தன்மை என்ன என்பதைப் பற்றியும் அதன் எதிர்க்கூறான பரந்துபட்ட மக்களின் வர்க்கத் தன்மை என்ன என்பதை பற்றியும் மீண்டும் ஆய்வு செய்து நிறுவாமலேயே இந்த செயல்தந்திரத்தை மக்கள் அதிகாரம் முன் வைத்துள்ளது.
புதிய செயல் தந்திரம் வெளியீட்டில் பக்கம் 128 -ல்
“செயல் தந்திரத்தின் வளர்ச்சிப் போக்கில் தற்போதைய கட்டமைப்பை தகர்க்கும் கடமை முடிந்து புதிய ஜனநாயகத் திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். புதிய ஜனநாயகக் கட்டத்திற்கு முந்தைய ஒரு படியில் சென்றும் முடியலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை (ஏற்றத்தாழ்வான உற்பத்தி முறை) என்பதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. நீண்டகால மக்கள் யுத்தப் பாதைக்கும் இந்தப் புதிய செயல் தந்திரத்திற்கும் என்ன உறவு என்பதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
இப்படி நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை பற்றி ஏதும் குறிப்பிடாமல் இருப்பதற்கும் மிகுநிலையிலிருந்த விவசாயம் பின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று குறிப்பிடுவதற்கும் தொடர்பு இருக்கிறது.
அதாவது ‘இந்திய உற்பத்தி முறை மாறிவிட்டது. பழைய விவசாய உற்பத்தி மிகு நிலையில் இல்லை. அதனால் நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை இனி தேவையில்லை. அது உற்பத்தி மாற்றத்தினால் காலாவதி ஆகிவிட்டது, அந்த அடிப்படையில் நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையேயான முரண்பாடு பிரதானமாக இனி இல்லை’ என்ற மன நிலையில் சிந்தித்து தலைமை இந்த செயல் தந்திரத்தை வகுத்துள்ளது.
இது மட்டுமல்ல புறநிலையைப் பற்றி பேசும் தலைமை அகநிலையைப் பற்றி பேசவில்லை. அவ்வாறு அகநிலையைப் பற்றி பரிசீலிக்காமலேயே ஒரு செயல்தந்திரத்தை வகுத்துள்ளது.
புறநிலையைப் பற்றி பேசும் போது இன்றைய இந்தியாவின் உற்பத்தி முறை என்ன என்பதை ஆய்வு செய்து நிறுவுவதுதான் முதன்மையானதும் அடிப்படையானதும் ஆகும். அந்த ஆய்வை இன்னும் முடிக்கவில்லை. ஆனால், அதற்கானத் தரவுகளை முன் வைத்து ஆதார பூர்வமாக நிறுவி முடிவு செய்யாமலேயே ‘விவசாய உற்பத்தி பின்நிலைக்குத் தள்ளப்பட்டது’ என்று பேசுகின்றது. ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தி அதில் இந்தத் தாக்குதல் செயல் தந்திரத்தை நிறைவேற்றியதின் மூலம், விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டது என்ற முடிவையும் வைத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்று விட்டது.
ஆனால் இந்த அங்கீகாரமும், முடிவும் ஜனநாயகமான முறையில் நடைபெறவில்லை. ஒரு பிளீனத்தில் எடுத்த முடிவை மாற்றுவதை மீணடும் பிளீனம் கூட்டி அதற்கானத் தரவுகளை முன் வைத்து விவாதித்து செய்யாமல் இப்படி ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அவசர அவசரமாக எடுத்தது சரியாகத் தெரியவில்லை.
அவசர அவசரமாக முடிவு எடுத்துள்ளதாக ஏன் சொல்கிறோம்?
ஏற்கனவே இநதிய சமுதாயத்தின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அப்படி ஆய்வு செய்து முடிப்பது புதிய செயல் தந்திரத்தை வகுப்பதற்கும் தேவைப்படுகின்றது. அதை ஆய்வு செய்து புரிந்து கொண்டால்தான் புதிய செயல் தந்திரத்தை வகுக்க முடியும். அப்படி செய்யாமல் புதிய செயல் தந்திரத்தை வகுத்துள்ளது, தலைமை. இது அவசர கோலம்தான். ஆய்வுக்கு முன் இப்படி ஒரு புதிய செயல் தந்திரத்தை வகுக்கவேண்டிய நிர்பந்தம் என்ன என்பதற்கான கேள்விக்கு பதில் ஏதும் இல்லை.
புதிய செயல் தந்திரத்தின் வெளியீட்டில் பக்கம் 97 ல் பின் வருமாறு கூறப்படுகிறது.
“இருந்தாலும் அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்கு காரணம் மக்கள் அமைப்புகளும் போராட்டங்களும் அந்த அளவுக்கு, அவற்றை வீழ்த்தும் வகையில் இப்போதைக்குச் சக்தி வாய்ந்தவையாக இல்லை.” என்று கூறப்பட்டுள்ளது.
அதனால்தான் அவசர கோலமாக இச்செயல் தந்திரம் வகுக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றோம்.
புறநிலை சக்தி பற்றி பேசும் போது
• இந்த நாட்டின் தற்போதைய உற்பத்தி முறை
• உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
• சமூக நிலைமை
• ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
• ஆளும் வர்க்கங்களின் அறிவு ரீதியான பிரதிநிதிகள் எனும்படியான பல்வேறு கட்சிகளின் தலைமைகள்
• பல்வேறு சாதிகள், மதங்கள், அவைகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றங்கள்
• புரட்சி நடத்தும் சக்திகள்
• பாட்டாளி வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
• பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இயங்கும் வெகுஜன அமைப்புகள்
• அவர்களின் தலைமையில் இயங்கும் பரந்துபட்ட மக்கள்
• ஆளும் வர்க்கங்கள் பற்றிய மக்களின் கண்ணோட்டம்
• புரட்சிகர தலைமை பற்றிய மக்களின் கண்ணோட்டம்
போன்றவை எல்லாம் அடங்கியதுதான் புறநிலை எதார்த்தம் என்பது.
எனவே புறநிலை என்பது இயற்கை அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் அகநிலை சக்திகளின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான். அகநிலை சக்திகள் இல்லாத புறநிலை என்று ஏதும் இல்லை. நாம் பரிசீலனைக்காக புறநிலை அகநிலை என்று பிரித்து பரிசீலிக்கின்றோமே தவிர அகநிலை இல்லாத, அகநிலை பற்றி பேசப்படாத புறநிலை என்பது ஏதும் இல்லை. இருக்கவும் முடியாது.
ஆனால் மக்கள் அதிகாரம் புறநிலை சக்தியின் வளர்ச்சிப் பற்றி பேசும் போது அதிலுள்ள அகநிலை சக்திகள், அவை தற்போது தாக்குதல் செயல் தந்திரத்தை செயல்படுத்தும் வகையில் நிலையில் வளர்ந்துள்ளனவா என்பதை கணக்கில் கொள்ளாமலே தாக்குதல் செயல் தந்திரம் பற்றி பேசுகின்றது.
சமூக மாற்றத்தைப் பற்றி பேசுகின்றோம், ஒரு புரட்சியைப் பற்றி பேசுகின்றோம். ஒரு போரைப் பற்றிப் பேசுகின்றோம். அப்படி இருக்கும் போது அகநிலை சக்திகள் இன்னும் போதிய சக்திகளாக வளரவில்லை என்றுக் கூறிக் கொண்டே தாக்குதல் செயல் தந்திரத்தை எப்படி வகுக்க முடியும்?
“முரண்பாடு பற்றி…” என்ற வெளியீட்டில் தோழர் மாவோ கூறுவதைப் பார்ப்போம்.
பக்கம் 10 கடைசி பாரா
“பொருள் முதல்வாத இயங்கியல் புறக் காரணங்களை ஒரு போதும் புறக்கணிப்பதில்லை. புறக்காரணங்கள் மாறுதலுக்கான சூழ்நிலை. அகக் காரணங்களே மாறுதலுக்கான அடிப்படை. புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியே செயல்படுகின்றன என்று பொருள் முதல்வாத இயங்கியல் கருதுகின்றது. பொருத்தமான வெப்ப நிலையில் ஒரு முட்டை குஞ்சாக மாறுகிறது. ஆனால் எந்த வெப்பநிலையிலும் ஒரு கல் குஞ்சாக மாறுவதில்லை. ஏனென்றால் இரண்டுமே வெவ்வேறான அடிப்படை கொண்டவை.”
மேற்கண்ட தோழர் மாவோவின் வழிக்காட்டுதலில் இருந்து என்ன புரிகின்றது?
சமூக மாற்றம், புரட்சி, போர் ஆகியவற்றில் அகக் காரணங்கள் அடிப்படையானவை என்பதைப் புரிந்து கொள்கிறோம். அதாவது புறக்காரணங்களை எந்த அளவிற்கு பரிசீலிக்கின்றோமோ அந்த அளவுக்கு அகக் காரணங்களையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதில் எந்த ஒன்றையும் விட்டு விட்டு பரிசீலிக்க முடியாது.
பொருத்தமான வெப்பநிலையில் ஒரு முட்டை குஞ்சாக மாறுகிறது. ஆனால் எந்த வெப்ப நிலையிலும் ஒரு கல் குஞ்சாக மாறுவதில்லை. இதன் பொருள் என்ன? புறநிலை சக்திகள் வளர்ந்து இருந்தாலும் மாற்றத்திற்கான அடிப்டையான அகநிலை சக்திகள் வளர்ந்திருக்கவில்லை என்றால் மாற்றத்தைப் பற்றி பேச முடியாது. இதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகின்றோம்.
‘புறநிலையில் கட்டமைப்பு நெருக்கடி’ என ஒரு வெளியீட்டை மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ளது. ஆனால் அகநிலை சக்திகள் பற்றி சில வரிகளில் போகிற போக்கில் கூறிவிட்டுச் செல்கின்றது. தொகுத்துப் பார்த்தால் இந்தப் புதிய தாக்குதல் செயல் தந்திரத்தை வகுத்ததின் மூலம் அவ்வமைப்பு ஒரு இடது திசை விலகலில் மூழ்கியுள்ளது.
செயல் தந்திரத்தை அகநிலை சக்தியாகிய நாம்தான் வகுக்கின்றோம். புறநிலையைப் பயன்படுத்தி புரட்சிக்கு-தலைமை தாங்கி வழி நடத்தி மாற்றக் கூடிய அகநிலை சக்திகள் புறநிலை சக்திகளின் வளர்ச்சிக்குத் தகுந்த மாதிரி வளர்ந்துள்ளனவா, இல்லை இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனவா என்ற ஆய்வை கணக்கில் கொள்ளாமல் ஒரு செயல்தந்திரத்தை வகுக்க முடியாது. அதுவும் தாக்குதல் செயல் தந்திரத்தை வகுக்க முடியாது.
மக்கள் அதிகாரம் வகுத்துள்ள தாக்குதல் செயல் தந்திரம் என்பது அகநிலை விருப்பமே, ஆசையே, தவிர யதார்த்த நிலைமைகள் அப்படி இல்லை. மேலும் அகநிலை சக்தியின் வளர்ச்சியின் அவசியத்தை கணக்கில் கொண்டுதான் செயல் தந்திரத்தை வகுக்க முடியும் என்பதை புரிந்துக் கொள்ள தோழர் மாவோ கூறும் வழிகாட்டலைப் பார்ப்போம்.
முரண்பாடு என்ற வெளியீட்டில் பக்கம் 64-ல்
“6. முரண்பாட்டில் பகைமைத் தன்மையின் இடம்” என்ற தலைப்பில் பாரா2 ல்.
“எதிரானவைகளின் போராட்டம் என்பதின் குறிப்பிட்ட வெளிப்பாடாகவே மனித குல வரலாற்றில் வர்க்கங்களுக்கு இடையே உள்ள பகைமைத் தன்மை விளங்குகிறது. சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கிடையே இருக்கும் முரண்பாட்டைப் பாருங்கள்! இத்தகைய முரண்பட்ட வர்க்கங்கள் ஒரே சமயத்தில், அது அடிமைச் சமுதாயமானாலும் சரி, நிலப்பிரபுத்துவ சமூகமானாலும் சரி, அல்லது முதலாளித்துவ சமூகமானாலும் சரி, அது எதுவாக இருந்த போதிலும்: அந்த சமூகத்தில் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்வதோடு, ஒன்றுடன் ஒன்று போராடவும் செய்கின்றன. ஆனால் இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளரும் வரை வெளிப்படையான பகைமை வடிவத்தைப் பெற்று புரட்சியாக வளர்வதில்லை. வர்க்க சமுதாயத்தில் அமைதியானது போராக மாறுவதற்கும் இது பொருந்தக் கூடியதே ஆகும்”
அதாவது எதிரிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு வெளிப்படையான வடிவத்தை பெறாதவரை ஆளும் வர்க்கத்தைத் தூக்கி எறிய முடியாது என்றாகிறது.
ஆனால், மக்கள் அதிகாரம் தோழர் மாவோ வழிகாட்டலுக்கு மாறாக சிந்திக்கின்றது. அகில இந்தியப் புரட்சி பற்றிப் பேசும் தலைமைக்கு அகில இந்திய அளவில் ஒரு கட்சியில்லை. அகில இந்திய அளவில் ஒரு ஐக்கியப்பட்ட கட்சியை இதுவரை கட்ட முடியவில்லை. தமிழ்நாட்டில் கூட எல்லா தாலுக்காக்களிலும் அமைப்பு இருப்பதாகக் கூற முடியாது. ஓரிரு நாட்களோ அல்லது ஓரிரு மணி அளவிலோ இந்த ஆளும் வர்க்கத்தையும் அதன் அரசையும் ஸ்தம்பிக்க வைக்கும் அளவு ஒரு போராட்டத்தை நடத்த தற்போது முடியாது.
பல கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் யாருக்கு சமூக மாற்றம் தேவையோ அந்த மக்களை ஆளும் வர்க்கங்களின் பல்வேறு கட்சிகளும் பிழைப்புவாதக் கட்சிகளும் தங்களின் பின்னே திரட்டி வைத்துள்ளனர். தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள், பிழைப்பு வாதக்கட்சிகளுக்கு அமைப்புகள் இருக்கின்றன. இந்த ஆளும் வர்க்கக் கட்சிகள், பிழைப்புவாதக் கட்சிகளின் தலைவர்களை தங்களின் தலைவர்களாக, தங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மக்கள் ஏற்றுள்ளனர். பல்வேறு சாதிகள். மதங்கள், கடவுள்கள், மடாலயங்கள் பின்னே மக்கள் சென்று கொன்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஒரு மக்கள் விரோதி, ஒரு கழிசடை ஒரு அறைகூவல் விட்டால் பல ஆயிரம் பேர் பால் குடம் ஏந்தி செல்கின்றனர். அது பணத்திற்காகக் கூட செல்வதாக இருக்கலாம். அவர்கள் தங்கள் கடமையை, உரிமையை எல்லாம் உணர்ந்து புரிந்து கொள்ளாமல் இப்படி போகிறார்கள் என்றால், அந்தப் பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் இன்னும் திரட்ட முடியவில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.
அகநிலை என்ற அடிப்படையில் நாம் இன்னும் கட்சி கட்டும் துவக்க நிலையில்தான் இருக்கிறோம். ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசிற்கும் எதிரான வெளிப் படையான பகைமைத் தன்மையை இன்னும் ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் நாம் இருக்கின்றோம். இது போன்றதொரு சூழலில் தாக்குதல் செயல்தந்திரத்தை வகுத்து செயல்படுகிறோம் என்பது நமது அகநிலை விருப்பமாகவே இருக்கமுடியும்.
கட்சி கட்டும் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றோம். கிளர்ச்சி, போராட்டம் என்ற நிலையைக் கூட அடையவில்லை. தாக்குதல் செயல் தந்திரம் எனும் போது அதில் ராணுவ அம்சம் இல்லை. (ராணுவ ரீதியான தாக்குதல் இல்லை) பிரச்சாரம்தான் செய்வோம் என்று கூறுகின்றோம். அரசியல் எழுச்சியைப் பற்றி கூறுகின்றோம்.
நமது அரசியல் சித்தாந்தம் வளரக்கூடியது. வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பது. எதிரியின் பிற்போக்கு சித்தாந்தம், அரசியல், அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது. அதற்கு தோல்வி தவிர்க்க முடியாதது. நமது சித்தாந்தத்திற்கு வெற்றி தவிர்க்க முடியாதது. இந்த அடிப்படையில் நமது சித்தாந்தம், அரசியல் எப்போதும் தாக்குதல் நிலையில்தான் (முன்னேறிக் கொண்டுதான்) இருக்கும் என்று கூறலாம்
ஆனால், செயல் தந்திரம் எனும் போது அது செயலுக்காக நடைமுறைக்காக வகுக்கப்படும் கோட்பாடு. இதில் தாக்குதல் என்ற வார்த்தையைப் போட்டுவிட்டு அதில் ராணுவ ரீதியான தாக்குதல் இருக்காது வெறும் பிரச்சாரம்தான் இருக்கும், அரசியல் எழுச்சிதான் என்று கூறமுடியுமா?
தற்போது வைத்திருக்கும் செயல் தந்திரம் என்பது புதிய ஜனநாயக புரட்சியை நிறைவு செய்வதாக இருக்கலாம். அல்லது அதன் வாயிற்படியில் கொண்டு போய் விடுவதாக இருக்கலாம், என்று கூறுகின்றது, மக்கள் அதிகாரம். ஆனால் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உள்ள இந்த நாட்டில் நீண்ட மக்கள் யுத்தப் பாதை என்று, தான் வைத்திருக்கும் ராணுவ போர்த்தந்திரத்திற்கும இந்தத் தாக்குதல் செயல் தந்திரத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன என்பது பற்றியோ அல்லது அதற்கும் இதற்கும் எந்த உறவும் இல்லையா என்பது பற்றியோ புதிய செயல் தந்திரத்தில் குறிப்பிடப்படவில்லை.
தற்போது வைத்துள்ள இந்த செயல் தந்திரத்தின் கீழ் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் உள்ள பல்வேறு புரட்சிகர சக்திகளை, ஜனநாயக சக்திகளை ஒரு ஐக்கிய முன்னணியில் இணைத்துக் கொண்டு செல்ல பொது மேடையாக ஒரு அமைப்பு தேவைதான். ஆனால், அதை கட்டமைப்பு நெருக்கடி என்ற அடிப்படையிலோ, மக்கள் அதிகாரம் என்ற அடிப்படையிலோ ஏற்படுத்தியிருப்பது தவறானது.
எனவே, இதை தாக்குதல் செயல் தந்திரம் என்று கூற முடியாது, கூறக் கூடாது. அதற்கான அடிப்படை ஏதும் இல்லை. தாக்குதல் என்ற வார்த்தை – நாட்டின் இன்றைய சூழ்நிலையில் அடிப்படை மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கவேண்டிய அகநிலைசக்திகளின் வளர்ச்சி என்பது, தேவையான அளவு வளராத இந்தச் சூழ்நிலையில் – தாக்குதல் என்ற வார்த்தை உள்ளீடற்ற வார்த்தை ஆகும்.
செயல் தந்திரம் பற்றி “லெனினியத்தின் அடிபடை கோட்பாடுகள்” என்ற வெளியீட்டில் தோழர் ஸ்டாலின் கூறியது. பக்கம் 119 ல்
“புரட்சி இயக்க வெள்ளம் பெருகுவதும் வடிவதும், புரட்சி அலை ஓங்குவதும் ஓய்வதும், ஒப்பீட்டளவு குறுகியதொரு காலத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நடத்தை வழியைத் தீர்மானிப்பவை. பழைய போராட்ட வடிவங்கள், அமைப்புகளுக்குப் பதிலாக புதிய போராட்ட வடிவங்களையும் அமைப்புகளையும் முன்வைத்தும், பழைய அரசியல் முழக்கங்களுக்குப் பதிலாக புதிய அரசியல் முழக்கங்களையும் முன்வைத்து, பழைய புதிய போராட்ட வடிவங்களையும் அமைப்புகளையும் இணைத்தும் இந்த வழிமுறையை முன்னெடுத்துச் செல்ல உறுதியாகப் போராடுவதும் ஆகும்.”-ஸ்டாலின்.
இதில் புரட்சி அலை ஓங்குவது ஓய்வது, புரட்சி வெள்ளம் பெருகுவது வடிவது எனும்போது புரட்சியைப் பற்றி, அடிப்படை மாற்றத்தைப் பற்றி, ஒரு போர் செய்வதைப் பற்றி பேசுவது ஆகும். இதில் புரட்சிக்கு முதன்மையானது அகநிலை சக்திகளின் வளர்ச்சி என்பது அடிப்படையான விசயம். புறக் காரணங்கள் மாறுதலுக்கான சூழ்நிலை. இந்த அடிப்படையில்தான் புரட்சி அலை பற்றி இங்குப் பேசப்படுகிறது. அதாவது புறநிலை எந்த அளவிற்கு கனிந்துள்ளது என்பதைப் பொறுத்து அதற்கு தகுந்தமாதிரி அகநிலை சக்திகள் (கட்சி- பாட்டாளி வர்க்கத் தலைமை, அதன் தலைமையில் உள்ள வெகுஜன அமைப்புகள், அதன் தலைமைகளில் இயங்கும் மக்கள் திரள் மற்றும் அந்த மக்களின் புரட்சி பற்றிய, மாற்றம் பற்றிய கண்ணோட்டம், எதிரியைப் பற்றியக் கண்ணோட்டம்) எந்த அளவிற்கு வளர்ந்துள்ளன அல்லது இன்னும் பின்தங்கி இருக்கிறன என்பதையும் இணைத்துதான் அந்த அலையைப் பற்றி தீர்மானிக்க முடியும். அகநிலை சக்திகளின் தற்போதைய நிலையை கணக்கில் கொள்ளாமல் அலையைப் பற்றி நாம் ஏதும் பேச முடியாது. அதுவும் செயல் தந்திரங்களை வகுப்பதே அகநிலை சக்திகள்தான். எனவே தற்போது தாக்குதல் செயல் தந்திரம் வைக்கும் அளவிற்கு புரட்சி அலை ஓங்கியோ புரட்சி வெள்ளம் பெருகியோ இல்லை என்பதுதான் அமைப்பின் முடிவு :
செயல்தந்திர வெளியீட்டில் பக்கம் 119 -ல்
“இதில் ஆளும் வாக்கங்களுக்கு கடுமையான சிக்கல், தடை ஏதுவும் வந்துவிடவில்லை. அதை தடை செய்யும் அளவுக்கு மக்கள் எழுச்சிகளும் போராட்டங்களும் வெடித்து விடவில்லை.!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இயக்க வெள்ளம் பெருகிக் கொண்டும் இயக்க அலை ஓங்கிக் கொண்டும் இல்லை என்பதும் அமைப்பின் முடிவே ஆகும். அப்படி இருக்கும் போது தாக்குதல் செயல் தந்திரத்தை எப்படி வகுத்துவிட முடியும்.
மேலும் அதே வெளியீடு பக்கம் 101-ல்
“நாட்டின் சமூக பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கலும் நெருக்கடியும் தாமே மக்களிடம் சமூக விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதில்லை. இந்நெருக்கடிகள் முற்றும் அளவிற்கு மக்களின் சமூக விழிப்புணர்வு மட்டம் நேர் விகிதத்தில் உயர்வதும் இல்லை. மக்கள் சமூக விழிப்புணர்வு பெறும் வரை நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கலும் நெருக்கடியும் காத்திருப்பதும் இல்லை. சமூகத்தின் இந்நிலைமையைப் புரிந்து கொண்டு முன்னேறிய பிரிவினர்தான் மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்னேறிய பிரிவினர்தாம் மக்களை வழிநடத்த வேண்டுமே தவிர, சமூக விழிப்புணர்வு பெறாத மக்களைப் பின்தொடர்ந்து போகக் கூடாது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மிகச் சரியானதுதான். சமூக விழிப்புணர்வு பெறாத மக்களை பின்தொடர்ந்து போகக் கூடாதுதான், ஒரு கட்சி கோட்பாட்டு ரீதியாக வழிநடத்தும் பணியைத்தான் வேண்டும். ஆனால், அதற்கு பின்வருகின்ற கருத்துக்களின் மதிப்பீடுதான் அபத்தமாக உள்ளது. அதாவது குதிரைக்கு முன்னால் வண்டியை வைத்துப் பூட்டும் நமது தலைமை.
“நாளையே ஒரு ஆயுதந் தாங்கிய எழுச்சிக்கு நாம் அறைகூவவில்லை. தாக்குதல் தன்மையுடைய ஒரு செயல்தந்திரத்தில் அரசியல் எழுச்சியைப் பற்றித்தான் நாம் பேசுகின்றோம்.” என்று கூறப்படுகிறது.
இதில் தாக்குதல் செயல்தந்திரம் என்று வகுத்து விட்டு அதில் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு நாம் அறைகூவல் விடவில்லை என்கிறார்கள். இது ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரணாக உள்ளது. “தாக்குதல் தன்மையுடைய செயல் தந்திரத்தில் அரசியல் எழுச்சியைப் பற்றிதான் நாம் பேசுகின்றோம்” என்று குறிப்பிடப்படுகிறது. ஓர் எழுச்சி இருந்தால்தான் அதாவது புரட்சி அலை ஓங்கி இருந்தால்தான், புரட்சி வெள்ளம் பெருகி இருந்தால்தான், அதற்கு தகுந்தாற் போல் போராட்ட வடிவங்களையும், அமைப்புகளையும் முன்வைத்தும் பழைய அரசியல் முழக்கங்களுக்கு பதிலாக புதிய அரசியல் முழக்கங்களை முன்வைத்தும், பழைய புதிய போராட்ட வடிவங்களையும் அமைப்புகளையும் இணைத்தும், இந்த வழிமுறையை முன்னெடுத்து செல்ல உறுதியாக போராடுவதும் ஆகும். அதாவது புரட்சி எழுச்சி இருந்தால்தான் இது போன்ற தாக்குதல் செயல் தந்திரத்தை வகுக்க முடியும் என்றாகிறது.
அதாவது அரசியல் எழுச்சி, புரட்சி வெள்ளம் பெருகி, புரட்சி அலை ஓங்கி இருந்தால்தான், அந்தச் சூழ்நிலையில்தான் இது போன்ற தாக்குதல் செயல் தந்திரத்தை வகுக்க முடியும். அதை விடுத்து அகநிலையிலிருது ஒரு தாக்குதல் செயல் தந்திரத்தை வகுத்துவிட்டு அதன்பிறகு ஒரு அரசியல் எழுச்சியை அந்தத் தாக்குதல் செயல் தந்திரத்தின் மூலம் ஏற்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். அது இயக்கவியலுக்கு புறம்பாக பேசுவதாகும். இது குதிரைக்கு முன்னால் வண்டியை வைத்துப் பூட்டுவதாகும்.
மேலும் தோழர் ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம். “லெனினிசத்தின் அடிப்படை கோட்பாடுகள்” என்ற வெளியீடு பக்கம் 130-ல்
“5. செயல் தந்திர ரீதியான தலைமை
செயல் தந்திர ரீதியான தலைமை என்பது போர்தந்திர ரீதியான தலைமையின் ஒரு பகுதியாகும். போர்தந்திர கடமைகளுக்கும், அதன் தேவைகளுக்கும் செயல் தந்திர கடமைகள் கீழ்ப்பட்டவை ஆகும். செயல் தந்திர ரீதியான தலைமையின் கடமை, பாட்டாளி வர்க்கத்தின் எல்லா போராட்ட வடிவங்களையும் போராட்ட அமைப்புகளையும் கற்றறிந்து தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதாகும். வெற்றியை சாதிக்க அவற்றைச் சரியாகவும் பொருத்தமாகவும் பயன் படுத்துவதாகும். சக்திகளின் குறிப்பிட்டதொரு உறவு நிலையில், போர்தந்திர ரீதியிலான வெற்றிக்கு தேவையான தயாரிப்புகளில் அதிகபட்ச சாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாகும்” என்று குறிப்பிடுகிறார்.
அதாவது பாட்டாளி வர்க்கத்தின் எல்லா போராட்ட வடிவங்களையும் போராட்ட அமைப்புகளையும் கற்றறிந்து தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதாகும் என்கிறார்.
இது போல் நாம் தேர்ச்சி பெற்றுள்ளோமா? 130 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் நாம் நமது தரப்பில் குறைந்த பட்சம் ஒரு தற்காப்புக் குழுவைக் கூட இன்னும் கட்டியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த நாட்டில் நாம் எந்த அமைப்பை புரட்சிகர அமைப்பு என்று ஏற்றுள்ளோமோ அந்த அமைப்புடன் குறைந்தபட்ச அய்க்கியத்தைக் கூட ஏற்படுததிக் கொள்ளாமல் இருக்கிறோம். இதில் அவர்களின் நடவடிக்கை சரியில்லையா? இல்லை நமது நடவடிக்கை சரியில்லையா? அவர்களின் அணுகு முறை சரியில்லையா? இல்லை நமது அணுகு முறை சரியில்லையா? என்பதல்ல பிரச்சினை. அவர்களுடனான ஐக்கியம் என்பதில் நாமும் சம்பந்தப் படுகிறோம் எனும் போது அவர்களுடன் ஐக்கியம் ஏற்படுத்தாமல் தோல்வியில் உள்ளோம் என்றாகிறது.
இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்பதை பரிசீலிக்கும் போது எந்தப் பக்கத்தை முதலில் பரிசீலனைக்கு உட்படுத்துவது? இயக்கவியல் விதிப்படி நாம் நம் அகநிலையைத்தான் முதலில் பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும். இந்த அய்க்கியம் ஏற்படாமல் இருப்பதற்கு நமது அணுகு முறைதான் பிரதான காரணம். இதைத் திட்டவட்டமாகக் கூறமுடியும். அவர்களுக்கும் நமக்கும் இடையிலுள்ள அனைத்து உறவுகளையும் நிலைமைகளையும் முறையாக பரிசீலித்தால் இந்த உண்மையை நம்மால் உணரமுடியும்.
மேலும் இதை புரிந்து கொள்ள தோழர் ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.
“லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற வெளியீட்டில் பக்கம் 134 ல் பாரா 4 ல்
“கட்சி உருவாக்கப்பட்டு வந்த காலத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற குழுக்களும் அமைப்புகளும் இணைக்கப்படாமல் இருந்தன. கட்சியில் அடிமுதல் நுனிவரையில் கற்றுக்குட்டித்தனமும் குறுகிய கண்ணோட்டமும் கட்சியை அரித்துத் தின்று கொண்டு இருந்தன. உட்கட்சி வாழ்வில் நிலவிய சித்தாந்தக் குழப்பம் என்பது குறித்துக் காட்டக் கூடிய தனிச்சிறப்பான பண்பாக இருந்தது. அப்போதைய நிலைமைகளில், அனைத்து ரஷ்ய அளவிலான ஒரு சட்டவிரோத பத்திரிகை (இஸ்க்ரா) ஆரம்பித்து நடத்துவதுதான் மொத்த நிகழ்ச்சி போக்கு என்ற சங்கிலியில் முதன்மை கரணையாகவும், கட்சியின் முன்னிருந்த எண்ணற்ற கடமைகளில் முதன்மைக் கடமையாகவும் இருந்தது. அது ஏன் என்றால், ரஷ்யாவில் அப்போதிருந்த சூழ்நிலையில் அனைத்து ரஷ்ய சட்டவிரோத பத்திரிக்கை என்ற சாதனத்தைக் கொண்டுதான், எண்ணற்ற குழுக்களையும் அமைப்புக்களையும் ஒன்று படுத்தக்கூடிய ஆற்றலுள்ள கட்சிக்குழுவை உண்டாக்குவதும், சித்தாந்த மற்றும் செயல் தந்திர ரீதியான ஒற்றுமைக்கான சூழ்நிலைமைகளை உண்டாக்குவதும், இவ்வாறாக உண்மையானதொரு கட்சியை உருவாக்குவதற்கான அஸ்திவாரங்களை கட்டி எழுப்புவதும் சாத்தியமாக்கக் கூடியதாக இருந்தது..”
மேற்கண்ட தோழர் ஸ்டாலின் கூற்றிலிருந்து எதைப் புரிந்துக் கொள்கிறோம்?
அப்போதைய நிலைமைகளில் அனைத்து ரஷ்ய அளவிலான ஒரு சட்டவிரோத பத்திரிகையை (இஸ்க்ரா) ஆரம்பித்து நடத்துவதுதான் மொத்த நிகழ்ச்சிப் போக்கு என்ற சங்கிலியில் முதன்மை கரணையாகும். கட்சியின் முன் இருந்த எண்ணற்ற கடமைகளில் முதன்மைக் கடமையாகவும் இருந்தது என்கின்றார்.
அது ஏன் என்றால், ரஷ்யாவில் அப்போதிருந்த சூழ்நிலைகளில் அனைத்து ரஷ்ய சட்டவிரோத பத்திரிகை என்ற சாதனத்தைக் கொண்டுதான் எண்ணற்றக் குழுக்களையும், அமைப்புக்களையும் ஒன்றுபடுத்தக் கூடிய ஆற்றல் உள்ள கட்சிக்குழுவை உண்டாக்குவதும் சித்தாந்த மற்றும் செயல்தந்திர ரீதியிலான ஒற்றுமைக்கான சூழ்நிலைகளை உண்டாக்குவதும், இவ்வாறான உண்மையானதொரு கட்சியை உருவாக்குவதற்கான அஸ்திவாரங்களை கட்டியெழுப்புவதும் சாத்தியமாகக் கூடியதாக இருந்தது என்கின்றார்
நாம் இப்படி செய்துள்ளோமா?
அகில இந்நிய அளவில் உள்ள குழுக்களை ஐக்கியப் படுத்த எந்த அளவு முயற்சி எடுத்து, எந்த அளவு வெற்றி கண்டோம் என்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஏற்கனவே நாம் முடிவு எடுத்த வந்த நமது அடிப்படை ஆவணங்களை மற்ற புரட்சிகரக் குழுக்களுக்கு மொழி பெயர்த்துத் தருவது என்பதையும் இதுவரை செய்யவில்லை. தோழா ஸ்டாலின் கூறுவது போல் மொத்த நிகழ்ச்சிப் போக்கு என்ற சங்கிலியில் முதன்மைக் கரணையாக கட்சியின் முன்னிருந்த எண்ணற்ற கடமைகளில் முதன்மை கடமையை நாம் செய்யவில்லை. குழுக்களை ஒற்றுமைப் படுத்துவதற்கான பணியை செய்யாமல் எதிரிக்கு எதிரான சிதறடிக்கப் பட்டிருக்கும் சக்திகளை ஒற்றுமைப் படுத்துவதில் கூட வெற்றி காணாமல் இருக்கும் நாம் இந்த பலமான எதிரிக்கு எதிரான தாக்குதல் செயல் தந்திரத்தை வகுத்து செயல் படுத்த முடியுமா?
மேலும் அதே வெளியீட்டில பக்கம் 133-ல்
“முன்னணி படையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி அடைவது என்பது முடியவே முடியாது. முழு நிறைவாக வர்க்கம் முழுவதும், பரந்து பட்ட மக்கள் அனைவரும் முன்னணி படையை நேரடியாக ஆதரிக்கும் சூழ்நிலையை அடைவதற்கு முன் அல்லது, குறைந்த பட்சமாக முன்னணி படையிடம் பரிவுடன் கூடிய நடுநிலையையும் பகைவனுக்கு ஆதரவு அளிக்காத நிலையையும் அடைவதற்கு முன் முன்னணிப் படையை மட்டும் முடிவு கட்டக் கூடியதான தீர்மானகரமான போரில் இறங்கச் செய்வது படு முட்டாள்தனம் மட்டுமல்ல, மன்னிக்க முடியாத கொடுங்குற்றமாகும். உண்மையில் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் அனைவரும், மூலதனத்தால் ஒடுக்கப்படும் அனைவரும், இந்த நிலையை வந்தடைய வேண்டுமானால், அதற்கு வெறும் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போதாது. இந்த நிலையை வந்தடைவதற்கு பரந்துபட்ட மக்களுக்கு சொந்த அனுபவம் தவறாமல் இருந்தாக வேண்டும். மகத்தான புரட்சிகள் அனைத்திற்குமான அடிப்படை விதி இதுதான்….”
அதாவது முன்னணி படையை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி அடைவது என்பது முடியவே முடியாது என்கிறார். ஆனால் நாம் அந்த முன்னணி படையைக் கூட இன்னும் முழு நிறைவானதாக்கவில்லை. பரந்தபட்ட மக்கள் நம் சக்தியின் பின்னால் அணிதிரண்டு நிற்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இது போன்ற தாக்குதல் செயல்தந்திரம் வகுக்க முடியுமா?!
அது மட்டுமின்றி பரந்துபட்ட மக்கள் அந்த நிலையை அடைய அவர்களுக்கு அனுபவம் தவறாமல் இருந்தாக வேண்டும். மகத்தான புரட்சிகள் அனைத்திற்குமான அடிப்படை விதி இதுதான். அதாவது, கோடான கோடி உழைக்கும் மக்கள் சொந்த அனுபவம் பெறவேண்டுமானால் அது கட்டமைப்பு நெருக்கடி பக்கம் 101-ல் கூறுவது போல் முடியாது. இப்படி பரந்துபட்ட மக்கள் சொந்த அனுபவத்தை பெறுவது என்பது ஒரு நீண்ட நெடிய முறையான போராட்டத்தின் ஊடேதான் பெற முடியும். அது அதற்குரிய காலத்தை எடுத்துக் கொள்ளும்.
அப்படியில்லாமல் நாம் நமது அகநிலை விருப்பத்தின்படி ஒரு தாக்குதல் செயல் தந்திரத்தை வகுத்து வைத்துவிட்டு அதற்காக அதில் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்துவது என்பது முன்னரே கூறியது போல் குதிரைக்கு முன்னால் வண்டியை வைத்துப் பூட்டுவதாகும். இது தவறான சிந்தனா முறை. அதாவது ஒரு அரசியல் எழுச்சி இருக்கும் போதுதான் புரட்சி வெள்ளம் பெருகும் போதுதான், புரட்சி அலை ஓங்கும் போதுதான் இது போன்ற ஒரு தாக்குதல் செயல் தந்திரத்தை வகுக்க முடியும்.
அடுத்து முரண்பாடு பற்றி எனும் நூலில் தோழர் மாவோ கூறுவது பக்கம் 47-ல் பாரா 3-ல்
“முரண்பாட்டின் குறித்த தன்மையைப் பற்றி ஆராயும் போது நாம் இந்த இரு பக்கங்களையும் ஆராய வேண்டும். ஒரு வளர்ச்சிப் போக்கில் உள்ள முதன்மை முரண்பாட்டையும் முதன்மையற்ற முரண்பாடுகளையும் மற்றும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்ற கூறையும் ஆராய வேண்டும். இது போன்று முரண்பாட்டின் இரு பக்கங்களுடைய வேறுபட்ட இயல்புகளையும் ஆராயாவிட்டால் நாம் சாரமற்ற ஆய்வில் மூழ்கி முரண்பாட்டைத் திடடவட்டமாகப் புரிந்துக் கொள்ள இயலாதவர்களாவோம். இதனால் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான சரியான வழிமுறைகளை கண்டுபிடிக்க முடியாதவர்களாகவும் இருப்போம்.” என்கிறார்.
இதிலிருந்து என்ன புரிந்துக் கொள்கிறோம். ஒரு வளர்ச்சிப் போக்கில் உள்ள முதன்மை முரண்பாட்டையும் முதன்மையற்ற முரண்பாடுகளையும் ஆராய வேண்டும். நாம் முதன்மையற்ற முரண்பாடுகளை அல்ல முதன்மையான முரண்பாடடைக் கூட ஆராயவில்லை. அதாவது முதன்மை முரண்பாடாக முன் வைத்திருந்த நிலப்பிரபுத்துவத்திற்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை ஆராயவில்லை. நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற வரையறைக்கு அடிப்படையாக இருப்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை. அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகு நிலை பெற்றிருந்த விவசாய உற்பத்தி முறை என்ற அந்த உற்பத்தி முறையை மீண்டும் ஆய்வு செய்து நிறுவவில்லை.
அடுத்து, ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும், முதன்மையற்ற கூறையும் ஆராய வேண்டும். மேலே சொன்ன முரண்பாட்டில் நிலப்பிரபுத்துவம் முதன்மைக் கூறு. இது தற்போது எப்படி மாறியிருக்கிறது. ஏற்கனவே இருந்தது போல் தனது நிலப்பிரபுத்துவத் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதா? இல்லை ஜங்கர் பாணி முறையில் மாறி அந்த நிலப்பிரபுத்துவத் தன்மையை இழந்துவிட்டதா என்பதை ஆய்வு செய்து நிறுவவில்லை. அடுத்து அந்த முரண்பாட்டின் இன்னொரு கூறாகிய பரந்து பட்ட மக்கள், இந்த மக்களின் வர்க்கத் தன்மை, அதாவது விவசாய உற்பத்தியில் மிகு நிலையிலிருந்த ஆகப் பெரும்பான்மையான பரந்துபட்ட மக்கள் விவசாயிகள் என்ற வர்க்கத் தன்மையிலிருந்து வேறு வர்க்கமாக மாறிவிட்டார்களா? என்பது பற்றிய ஆய்வையும் செய்து நிறுவவில்லை.
எனவே முரண்பாட்டின் அவ்விரு பக்கங்களுக்கு இடையேயான வேறுபட்ட இயல்புகளையும் ஆராயாமல் சாரமற்ற ஆய்வில் மூழ்கி இருக்கிறோம். முரண்பாட்டை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றோம். இதனால் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சரியான வழி முறையைக் கண்டுபிடிக்க முடியாதவர்களாக இருக்கிறோம்.
அதனால்தான் ஒரு தாக்குதல் செயல்தந்திரத்தை வகுத்து விட்டு அதன் பிறகு ஒரு அரசியல் எழுச்சியைப் பற்றி பேசுகிறோம். (முரண்பாடாக தலைகீழாகப் பேசுகின்றோம்)
அடுத்து அதே வெளியீடு பக்கம் 48-ல்
“மேலும், ஒரு முரண்பாட்டின் இந்தப் பருண்மையான கூறுகளின், ஒரு முரண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அதன் முதன்மை கூறு மற்றும் முதன்மையற்ற கூறின் மாற்றங்கள்தான் பழைய பண்புகளை விலக்குவதில், புதிய பண்புகளுக்கான சக்தியை உருவாக்குகின்றன. ஒரு புரட்சிகர அரசியல் கட்சியானது அரசியல் விவகாரம் இராணுவ விவகாரம் இரண்டிலும் தன்னுடைய போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரக் கொள்கைகளைச் சரியாகத் தீர்மானிப்பதற்கு பயன்படக்கூடிய ஒரு முக்கிய வழிமுறையாக அமைவது எது? முரண்பாடுகளில் உள்ள சமமற்ற, ஏற்றத்தாழ்வான நிலைகளைப் பற்றியும் முதன்மை முரண்பாடு பற்றியும் முதன்மையற்ற முரண்பாட்டைப் பற்றியும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்றக் கூறையும் பற்றியும் செய்கின்ற ஆய்வே அவைகளைத் தீர்மானிப்பதற்குரிய வழிமுறையாக அமையும்.
பொதுவுடைமையாளர்கள் அனைவரும் இதில் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும்”
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன?
ஒரு முரண்பாட்டின் வளர்ச்சிப் போக்கில் உள்ள அதன் முதன்மையான கூறு மற்றும் முதன்மையற்ற கூறின் மாற்றங்கள்தான் அதாவது (மேலே சொன்ன உதாரணத்தில்) நிலப்பிரபுத்துவம் என்ற வர்க்கத்தின் (முதன்மைக்கூறு) மாற்றம் மற்றும் முதன்மையற்ற கூறாகிய பரந்து பட்ட மக்களின் வர்க்கத் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள்தான் பழைய பண்பாகிய நிலப்பிரபுத்துவம் என்ற பண்பை விலக்கி புதிய பண்பாகிய புதிய ஜனநாயகம் என்ற பண்புக்கு சக்தியை உருவாக்குகிறது.
மேலும் ஒரு புரட்சிகர அரசியல் கட்சி அரசியல் விவகாரம், இராணுவ விவகாரம் இரண்டிலும் தன்னுடைய போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரக் கொள்கைகளைச் சரியாகத் தீர்மானிப்பதற்கு பயன்படக் கூடிய ஒரு முக்கிய வழி முறையாக இது அமைகிறது.
முரண்பாடுகளில் உள்ள சமமற்ற ஏற்றத்தாழ்வான நிலைகள் பற்றியும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்ற கூறையும் பற்றியும் செய்கிற ஆய்வே அவைகளை சரியாகத் தீர்மானிக்க பயன்படும் வழிமுறையாகும்.
எனவே, புதிய செயல் தந்திரம் வகுத்ததில் கூறும் முரண்பாடுகளில் தற்போதைய சமமற்ற, ஏற்றத்தாழ்வான நிலைகளைப் பற்றி ஆய்வு செய்து நிறுவவில்லை. ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறையும் முதன்மையற்றக் கூறையும்(அதாவது நிலப்பிரபுத்துவத்தையும் பரந்துபட்ட மக்களையும்) ஆய்வு செய்து நிறுவவில்லை.
இப்படி போர்த் தந்திரத்தையும், செயல் தந்திரத்தையும் வகுப்பதற்குத் தேவையானவற்றை முறையாகச் செய்யவில்லை.
ஆனால், “நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகுநிலைப் பெற்றிருந்த விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டது” என்று கூறுகின்றனர். அப்படி என்றால் என்ன பொருள்? உற்பத்தி முறை மாறிவிட்டது. இது இது வரை சொல்லியது போல இனி நிலப்பிரபுத்துவ சமூகம் கிடையது என்ற கருத்துக்கு வந்துள்ளனர். அதாவது முதன்மை முரண்பாடு மாறியுள்ளது. அதனடிப்படையில் அவர்களது போர்த்தந்திரம் மாற்றப்படவேண்டும் என்றாகிறது. அதாவது ஒரு முறையான ஆய்வு நடத்தி நிறுவப்பட வேண்டியக் கோட்பாட்டை போகிற போக்கில் கூறிவிட்டுச் செல்கின்றனர். அதாவது ஒரு முடிவுக்கு வந்துவிட்டு அந்த முடிவுக்கானத் தரவுகளை பிறகு சேகரிக்க முயலுகின்றனர். இந்த நடைமுறை பாரதூரமானத் தவறு.
மேலும் முரண்பாடு பற்றி வெளியீடு பக்கம் 57 ல்
“அனைத்துப் பொருட்களிலும் ஒப்பீட்டளவான ஓய்வு, தெட்டத் தெளிவான மாற்றம் என இரண்டு இயக்க நிலைகள் உள்ளன. இவ்விரண்டும் ஒரு பொருளிலுள்ள முரண்பட்ட இரு மூலக் கூறுகளுக்கிடையே நடைபெறும் போராட்டத்தினாலேயே ஏற்படுகின்றன.”
“ஒரு பொருளானது முதலாவது இயக்க நிலையில் இருக்கும் போது அப்பொருள் பண்பியலான (குணரீதியான) மாற்றத்தை அடைவதில்லை. அளவுரீதியான மாற்றத்தை மட்டுமே பெறுகிறது. அத்தோடு வெளித் தோற்றத்தில் ஓய்வு நிலையில் இருப்பது போலவும் அப்பொருள் காணப்படுகிறது.”
“அப்பொருள் இரண்டாவது இயக்கநிலையில் இருக்கும் போது முதலாவது நிலையிலிருந்த அளவுரீதியான மாற்றம் ஏற்கனவே ஒரு உச்சகட்டத்தை அடைந்து ஒற்றுமை நிலையிலுள்ள அப்பொருளைப் பிரிக்கின்றது. அதற்குப் பின் ஒரு பண்பு ரீதியான மாற்றம் விளைகிறது. அதனால் தெட்டத் தெளிவான மாற்றம் தெரிகின்றது.”
இதை சமூகத்திற்கு ஒப்பிடும் போது இன்றையக் கட்டத்தில் இந்திய சமூகத்தின் வளர்ச்சி என்பது முதலாவது இயக்க நிலையிலேயே இருக்கின்றது. இன்னும் இரண்டாது இயக்க நிலைக்கு வளரவில்லை. இந்தச் செயல் தந்திரத்தை, பொருத்தமற்ற சூழ்நிலையில் வைத்ததால் இடது திசை விலகில் சென்று கொண்டிருக்கின்றோம். இதனால் நாம் இரண்டு விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒன்று தற்போதைய ஒட்டு மொத்தச் சூழ்நிலையில் ஒன்றுபட்ட கட்சி கட்டும் பணிதான் பிரதானப் பணியாக உள்ளது. கட்சியைக் கட்டி விரிவு படுத்துவதும் அதன் தலைமையில் வெகுஜன அமைப்புகளைக் கட்டி, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசுக்கு எதிராக பயிற்றுவிப்பதும், அவர்களின் தலைமையில் கோடான கோடி உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் எதிரிக்கு எதிராக வளர்ப்பதும் அடிப்படையன முதன்மைப் பணியாக இருக்கறது. இதைக் கைவிட்டு புதிய தாக்குதல் செயல் தந்திரம் என்று அதற்கான எழுச்சியை ஏற்படுத்துவது என்று கிளம்பினால் அது அமைப்பின் வளர்ச்சியை பின்னடைவுக்குத் தள்ளும். இன்றைய சூழ்நிலையில் என்ன தேவையோ அதை செய்யாமல் திசைவிலகிப் போவதால் அமைப்பு கண்டிப்பாக பின்னடைவை சந்திக்கும்.
இரண்டாவது : இந்தத் தாக்குதல் செயல் தந்திரம் எதிரியை தூண்டி உசுப்பி விட்டு அதனால் எதிரி அடக்கு முறையை ஏவிவிட்டால் நாம் நம் சக்திக்கு மிஞ்சிய அடக்கு முறையை சுமக்க வேண்டியிருக்கும். இதனால் அமைப்பின் வளர்ச்சி கண்டிப்பாக பின்னடைவை சந்திக்கும்.
எந்த ஒரு தோல்விக்கும் வெற்றிக்கும் முதலில் அகநிலையைத்தான் ஆய்வு செய்யவேண்டும். வெற்றி தோல்வி எதுவானாலும் அதற்கு அகநிலை செயல்பாடுதான் அடிப்படை. எதிரி தாக்குவது புறநிலை. புறக்காரணங்கள் அகக் காரணங்கள் வழியாகவே செயல் படுகின்றன என்று பொருள் முதல்வாத இயங்கியல் கூறுவதை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகின்றது.
அடுத்து, இதுவரை நாம் நமது கட்சியின் தலைமைக் குழுவைத்தான் பிளீனத்தில் தேர்ந்தெடுத்துள்ளோம். மற்ற அமைப்புகளை மண்டல, மாவட்ட, வட்ட, கிளை அளவுக்கு இன்னும் தேர்தல் முறையில் அமைப்பைக் கட்டமைக்க நம்மால் முடியவில்லை. கட்சி உறுப்புக்கள் அதற்கான நிறைவான வளர்ச்சி அடையவில்லை. வெறும் நியமனத்தில்தான் நிர்ணயித்துள்ளோம். மக்கள் திரள் அமைப்புகளில் கூட இனனும் தேர்தல் முறையில் தேர்வு செய்து அமைப்பைக் கடடவில்லை. மிக மிக ஆரம்பக் கட்டத்திலேயே இன்னும் இருக்கிறோம்.
நாம் இன்னும் முதலாவது இயக்க நிலையிலேயே இருக்கின்றோம். இரண்டாவது இயக்க நிலைக்கு அதாவது அளவு மாற்றம் ஒரு உச்சத்தை அடைந்து அதன் பிறகு பண்பு மாற்றத்தை அடையும் இரண்டாவது இயக்க நிலைக் கட்டத்தை இன்னும் அடையவில்லை. அதாவது தயாரிப்புக் கட்டத்திலேயே, முதலாவது இயக்க நிலைக் கட்டத்திலேயேதான் வளர்ச்சி நிலை இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் தோழர்கள் பின் வருமாறு பேசலாம். “இல்லை இல்லை நாம் இன்றே ஆயுத எழுச்சிக்கு அறை கூவல் விடவில்லை. தாக்குதல் செயல் தந்திரத்தில் அரசியல் எழுச்சியைப் பற்றித்தான் பேசுகிறோம்” என்று.
ஆனால், கட்டமைப்பு நெருக்கடி வெளியீடு 128 வது பக்கத்தில் முதல் பாராவில்
“செயல் தந்திரத்தின் வளர்ச்சிப் போக்கில் தற்போதையக் கட்டமைப்பை தகர்க்கும் கடமை முடிந்து அது புதிய ஜனநாயகக் கட்டத்தை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். புதிய ஜனநாயகக் கட்டத்திற்கு முந்தைய ஒருபடியில் சென்றும் முடியலாம்.” ஏன்று கூறுகின்றோம்.
அதாவது பண்பு மாற்றத்தை அடையும் இரண்டாவது இயக்க நிலைக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இருப்பது போல் பேசுகிறோம். இது தவறு.
எனவே
இப்போது வகுத்திருக்கும் உள்ளீடற்ற அந்த தாக்குதல் செயல் தந்திரத்தை கைவிட்டு அகில இந்திய அளவில் ஒரு ஐக்கியப்பட்ட கட்சியை கட்டி நிறுவுவதும், கட்சி அமைப்புகளையும் வெகுஜன அமைப்புகளையும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்து நிறுவி உறுதி படுத்தும் அளவுக்கு வளர்த்தெடுப்பதும் அதை நிறைவேற்றுவதற்கு தற்போது என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் இன்றைய கட்டத்தில் நமது செயல் தந்திரமாக இருக்கமுடியும். அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டு செயல்படுத்துவதுதான் இன்றைய தேவை.
இந்த அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாது. அதை இந்தக் கட்டமைப்புக்கு வெளியே ஒரு மாற்று அதிகாரத்தின் மூலம் மட்டுமேதான் தீர்க்க முடியும் என்று நாம் கூறும் போது அகில இந்திய அளவில் உள்ள மக்கள் பிரச்சினைகளை இப்படித்தானே தீர்க்க முடியும். எதிரி நம்மை அடக்கி ஒடுக்கிச் சுரண்ட அந்த மக்களின் உழைப்பையும் தானே அவன் சுரண்டிக் கொண்டு இருக்கிறான். அப்படி இருக்கும் போது இந்த நமது மையப்படுத்தப்பட்ட எதிரியை எதிர்க்க இந்த எதிரியால் பாதிக்கப்படும் அந்தப் போராளிகளுடன், மக்களுடன் அய்க்கியப் படாமல் நாம் மட்டும் தனித்து இந்த மையப் படுத்தப்பட்ட எதிரியை எதிர்க்க என்ன அவசியம் என்ன நிர்பந்தம் இருக்கின்றது? இப்படி அவர்களுடன் ஐக்கியப்படும் வேலையைக் கூட செய்ய முடியாத நாம் இது போன்ற மையப்படுத்தப்பட்டிருக்கும் பலமான எதிரியை எப்படி போராடி வீழ்த்த முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.
இங்கு தமிழகத்தில் நாம் போராடுவதுடன் இதற்கு இணையாக எடுத்துக்கொண்டு இந்த அய்க்கியத்திற்கான கடமைகளையும் நாம் செய்துதான் ஆகவேண்டும். அப்படி செய்யாமல் அதைப்பற்றி கவலைப்படாமல் செய்வது என்பது அகில இந்தியப் புரட்சியைப் பற்றி பேசுவதோ அகில இந்திய அளவில் உள்ள மையப்படுத்தப் பட்ட ஒரு பலமான எதிரியை போராடி வீழ்த்துவதாகப் பேசுவதோ இயலாத காரியம் ஆகும்.
இதுவும் ஒருவகையில் தமிழ் இனவாதிகள் பேசுவது போல் தமிழ்நாட்டை மட்டும் தனியாக விடுதலை செய்கின்றோம் என்பதைப் போன்ற சாராம்சத்தில் இனவாத அரசியலைப் போன்றதுதான். இதை பாரிய அளவில் உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்
இதுபோல் நாம் அகில இந்திய அளவில் புரட்சிகர சக்திகளுடன் இணைந்து அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு செயல்பட்டால்தான் மையப்படுத்தப்பட்ட இந்த எதிரியை வீழத்துவதற்கு சரியான யுக்தியை நாம் புரிந்துக்கொண்டு செயல் படமுடியும். இந்தக் கடமையை நாம் நிறைவேற்றவில்லை என்றால் நாம் ஆரம்ப பாடங்களில் படித்த நான்கு எருதுகள் தனித்தனியாகப் பிரிந்து சிங்கத்துடன் போராடி அழிந்து போன கதைதான்.
அவசரத்தில் அள்ளித் தெளித்த மக்கள் அதிகாரத்தின் கட்டமைப்பு நெருக்கடி
=====================================
இணைய தளத்தில் படிக்க :

எனவே, மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தனது பிறப்பிலேயே கோட்பாட்டு ரீதியான கட்டமைப்பு நெருக்கடியுடன் தோன்றி, இன்று வரை அந்த கோட்பாட்டு ரீதியான நெருக்கடியுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
(தோழர் ஆம்பள்ளி முனிராஜ் அமைப்பு தலைமைக்கு அனுப்பிய 16-12-2016 தேதியிட்ட மற்றும் ஜனவரி 2017ல் எழுதிய கடிதங்களின் அடிப்படையிலான கட்டுரை)
(தோழர் ஆம்பள்ளி முனிராஜ் அமைப்பு தலைமைக்கு அனுப்பிய16-12-2016 தேதியிட்ட மற்றும் ஜனவரி 2017ல் எழுதிய கடிதங்களின் அடிப்படையிலான கட்டுரை)