Categories
அரசியல்-கோட்பாடு-அமைப்பு

அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்

அன்பார்ந்த தோழர்களே,

ம.க.இ.கவின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனும், வினவு தளத்தின் தோழர் நாதனும் இந்த அமைப்புகளிலிருந்தும் அதிலும் குறிப்பாக அவற்றுக்கு அரசியல் தலைமையளிக்கின்ற அமைப்பின் தொடர்பிலிருந்தும் தாங்கள் விலகிக் கொள்வதாக ஒரு கடிதத்தை வினவு தளத்திலேயே வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் தோழர் மருதையன் அரசியல் ரீதியான முரண்பாடு எதையும் பேசவில்லை. தனக்கும் பிற தலைமை தோழர்களுக்கும் கோட்பாட்டு ரீதியாக என்ன வேறுபாடு என்று முன் வைக்கவில்லை. தோழர் மருதையன் ம.க.இ.க-வின் செயலாளராக மட்டுமின்றி அவரே சொல்லியிருப்பது போல இன்னும் பல தலைமை பொறுப்புகளையும் வகித்து வந்தவர். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் விலகுவதை அறிவிக்க இவ்வளவு கோட்பாடற்ற, தனிநபர் பிரச்சனை நிறைந்த அறிக்கையை வெளியிடுவது அந்த அமைப்பின் ஒட்டு மொத்த அரசியல் ஓட்டாண்டித்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

அரசியல் சித்தாந்தத்தை முதன்மையாகக் கொண்டிராத அமைப்பு இப்படிப்பட்ட நிலைக்குதான் வந்து சேரும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இப்போது இந்த அமைப்பும் அதன் தலைமையும் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை தலைமையில் உள்ள தனிநபர்களுக்கு இடையேயான பிரச்சனை என்று பார்க்க முடியாது. அரசியல் அமைப்பு கோட்பாட்டு நெருக்கடிகள் தனிநபர்கள் மூலமாகவே வெளிப்படுகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும் அவற்றை தனிநபர்களின் பிரச்சனையாகப் பார்ப்பதைத் தாண்டி அரசியல், அமைப்பு கோட்பாட்டு அடித்தளத்தை பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால், ஒட்டு மொத்த அமைப்பிலுமே சமீப ஆண்டுகளில் பிரச்சனைகளை தனிநபர்களுக்கு இடையேயானதாகவே பரிசீலித்து வந்திருக்கிறார்கள். அரசியல் அமைப்பு கோட்பாடுகளை பரிசீலிக்க தவறுகின்றனர். இப்போது, தோழர் மருதையனும் இந்தப் பிரச்சனையை தனக்கும் தலைமையில் உள்ள வேறு சிலருக்கும் இடையேயான பிரச்சனையாக மட்டும் சுருக்கிக் காட்டுகிறார்.

அமைப்பு முறை தவறாக பயன்படுத்தப்படுவதால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். 4 மாதங்களாக தலைமைக் குழுவுடன் போராடி விட்டு நியாயமான தீர்வு தனக்குக் கிடைக்காததால் பொது வெளியில் முன்வைப்பதாக கூறுகிறார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் தன்னைத் தவிர்த்த தலைமை தோழர்கள்தான் என்றும், தான் தனிப்பட்ட முறையில் தனிமைப்படுத்தி தாக்கப்படுவதாகவும் சொல்கிறார். இந்தக் கூற்றின் மூலம், தான் சரியாகத்தான் இருப்பதாக அவர் காட்டிக் கொள்கிறார். 35 ஆண்டுகளாக தலைமையில் இருந்து விட்டு இந்த ஒட்டு மொத்த தலைமையில் தன்னைத் தவிர மற்றவர்கள்தான் தவறானவர்கள் என்று கூறுகிறார். இது எதைக் காட்டுகிறது?

கட்சித் திட்டம் பற்றிய பார்வையோ, அமைப்பு நடைமுறை பற்றிய கோட்பாட்டு அடிப்படையோ இல்லாமல் செயல்படும் ம.க.இ.கவில் கடந்த 35 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான தோழர்கள் அதிகாரத்துவத்துக்கு எதிராகவும் பிற அரசியல் அமைப்பு கோட்பாட்டு பிரச்சனைகள் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக போராடியும் முறையான பதிலை பெற முடியாமல் தலைமையுடன் முரண்பட்டு வெளியேறியிருக்கின்றனர் அல்லது வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அவற்றில் எல்லாம் தனக்கு இருந்த பங்கைப் பற்றி பேசாமல் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார், மருதையன்.  கடந்த காலத்தில் இதே போன்று பாதிக்கப்பட்ட தோழர்கள் பற்றிய பரிசீலனையோ விளக்கமோ அவரது அறிக்கையில் எங்கும் கோடிட்டு கூட காட்டப்படவில்லை. இது தொடர்பாக தனது சுயவிமர்சனத்தை முன் வைக்காதது அணிகளை ஏமாற்றுவது ஆகாதா?

40 ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.கவின் அரசியல் தலைமையால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டு ஆவணங்கள் இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் நிலைமைகளை பருண்மையாக ஆய்வு செய்து எழுதப்பட்டவை அல்ல. அதனாலும் வேறு காரணங்களாலும் அவர்களே உருவாக்கி வழிகாட்டும் கோட்பாடக ஏற்றுக் கொண்ட ஆவணங்களை நடைமுறைப்படுத்தி சரி, தவறு என்ற அனுபவத்தைத் தொகுத்து தவறென்ற பட்சத்தில் உணர்ந்து மாற்றிக் கொள்ளவோ, அதை செழுமைப்படுத்திக் கொள்ளவோ அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே, மருதையன் உள்ளிட்ட ம.க.இ.கவின் அரசியல் தலைமையிடமோ அரசியல் அமைப்புக் கோட்பாட்டுக்கு எந்த அடிப்படையுமே இல்லை. நாட்டில் புரட்சிக்கான எந்த அடிப்படைக் கோட்பாடும் எப்போதுமே இவர்களிடம் இருந்ததில்லை என்பதால் இப்படிப்பட்ட பிளவுகள் தவிர்க்கவே இயலாததாகும்.

இப்போது மருதையனுடைய இந்த நிலைப்பாட்டுக்காக வருத்தப்படுபவர்கள், பரிதாபப்படுபவர்கள் யார்?

  1. ஒன்று மேடைப் பேச்சுக்களை கேட்டும் கட்டுரைகளை படித்தும் அந்த அளவில் அரசியலை புரிந்து கொண்டு அதற்கு மேல் அரசியல் அமைப்பு கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளாத தோழர்கள். புரட்சிகரமான கோட்பாடு, அரசியல், நடைமுறை என்ற உணர்வின் அடிப்படையில் அணிகளை வளர்த்தெடுக்காமல் தனிநபர் ஹீரோயிசத்தை முன்நிறுத்தி அமைப்பு வளர்த்தெடுத்தன் விளைவுதான் இவர்கள்.
  2. இன்னொரு தரப்பினர் வாழ்க்கை நிர்ப்பந்தத்தின் காரணமாக சமரசம் செய்து கொண்டு அமைப்பில் காலத்தை ஓட்டலாம் என்று இருப்பவர்கள்.
  3. சித்தாந்த அமைப்பு கோட்பாட்டு ரீதியாக சிந்திப்பவர்கள் இத்தகைய செயல்பாட்டை முறையாக பரிசீலனைக்கு உட்படுத்தி விமர்சிக்கிறார்கள்.

இந்தக் கடிதம், அணிகள் கருதுவது போல, இவர்கள் சொல்லிக் கொண்டிருந்ததைப் போல புரட்சிக்கு வழிகாட்டுவதற்கு தலைமை இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது; இந்த அமைப்பு பாட்டாளி வர்க்கத் தன்மையுடைய அமைப்பு இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

மருதையன் உள்ளிட்ட தலைமை சரியானவர்களாக இருந்திருந்தால் இதுவரை செய்த தவறுகளைப் பற்றி ஆழ்ந்த பாரதூரமான சுயவிமர்சனம் முன் வைத்து அணிகளிடமும் மக்களிடமும் வந்திருக்க வேண்டும். மாறாக, இதை எல்லாம் மறைத்து விட்டு தாங்கள் ஒழுங்காக இருப்பது போல காட்டிக் கொள்வதற்கு பல்வேறு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, புரட்சியை நேசிக்கின்ற இந்திய சமூகத்தின் விடுதலையை நேசிக்கின்ற தோழர்களை பின்வரும் அடிப்படையில் செயல்படுவோம் என்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் அறைகூவி அழைக்கிறோம்.

1. புரட்சிகரமான ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில் முடிவுகள் எடுத்து செயல்படுவதற்கான அமைப்பு முறையை உருவாக்கி செயல்படுவது.

2. ஏடறிந்த காலந்தொட்டு, இன்று வரையிலான இந்திய வரலாற்றை, வரலாற்றியல் பொருள்முதல்வாத விஞ்ஞான ஒளியில் ஆய்வு செய்து இந்தியாவின் தனித்துவமான சமூக, பொருளாதாரம் – சாதி, மதம் , தேசிய இனப் பிரச்சனை – ஆகியவற்றை உள்ளடக்கி இந்திய சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த புரட்சிகர மார்க்சிய லெனினிய கோட்பாட்டு புரிதலை வந்தடைவது. இதன் அடிப்படையில் இவற்றின் ஆளும் வர்க்க வெளிப்பாடான பார்ப்பன பயங்கரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க பரிவாரத்தை எதிர்த்து போராடுவதற்கான புரட்சிகர செயல்தந்திரத்தை வகுப்பது.

3. மேலே சொன்ன கோட்பாட்டு பணியின் ஒரு பகுதியாக நமது அமைப்பு உட்பட 100 ஆண்டுகால இந்திய கம்யூனிச இயக்கத்தின் அனுபவங்களையும் தவறுகளையும் தொகுத்து புரட்சியை நோக்கிய சரியான பாதையை ஏற்படுத்திக் கொள்வது.

4. 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டின் தொடக்கத்தில் உலக முதலாளித்துவத்தின் தன்மை பற்றிய புரட்சிகர மார்க்சிய லெனினிய கோட்பாட்டை வந்தடைவது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும், அதன் பின்னர் சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஏற்பட்டுள்ள சர்வதேச வர்க்க அணிசேர்க்கை பற்றிய புரிதலின் அடிப்படையில் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடவும் உலகளாவிய சோசலிச புரட்சியின் ஒரு அங்கமாக செயல்படவும் புரட்சிகர செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்வது.

5. இத்தகைய செயல்பாடுகளின் ஊடாக நூற்றுக்கணக்கான கட்சிகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து செயல்படும் இந்திய கம்யூனிச புரட்சியாளர்களுடன் உரையாடலையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இயக்கத்தை நடத்துவது.

6. செயல்பாட்டு பகுதிகளிலும், செயல்படும் குழு/கட்சி மூலமாகவும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவுடைமையாளர்கள் மத்தியில் பிரச்சாரம், அமைப்பு உருவாக்கப் பணிகளைச் செய்வது.

புரட்சிக்காகவும், சமூக விடுதலைக்காகவும் அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சேர்ந்து பணியாற்ற முன்வருகிறோம். சில ஆண்டுகளில் அந்தப் புரட்சிகர உணர்வை மழுங்கடித்து முடக்கிப் போடும் விதமான இந்த அமைப்பு அரசியல் நடைமுறை ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு போல நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது என்பது கசப்பான உண்மை.

இந்த நிலையில் அமைப்பு தலைமையோ, புரட்சிகர இயக்கத்துக்கு கோட்பாட்டு தலைமையோ, அரசியல் தலைமையோ அளிக்க திராணியின்றி, வலுவான அமைப்பை உருவாக்கும் பணியில் இறங்க வழியின்றி, புரட்சிகர தலைமைப் பொறுப்பை கைவிட்டு அமைப்பை திக்கற்ற வழியில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பையும் அதன் 40 ஆண்டுகால பணிகளையும் சரியான பாதையில் செலுத்துவதற்கான போராட்டத்தில் இணையும்படியும், அதன் ஊடாக இந்தியப் புரட்சிக்கான பாதையை உருவாக்கும்படியும், சர்வதேச புரட்சிகர இயக்கத்திற்கு பங்களிப்பு செய்யும்படியும் தோழர்களை அறைகூவி அழைக்கிறோம்.

– ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

மின்னஞ்சல் : amballi2030@gmail.com
தொலைபேசி : 77083 02843

 

2 replies on “அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்”

[…] 24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் ம…) […]

Like

[…] மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் ம… இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் […]

Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started