24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள்)
முன்குறிப்பு :
தோழர்களே, இந்தக் கடிதங்களில் மருதையன் மற்றும் பிற தலைமைக் குழு தோழர்கள் மீதான விமர்சனங்கள் முதன்மையாக உள்ளன. நாங்கள் எங்களது முதல் கடிதத்தில் குறிப்பிட்டது போல இந்த அமைப்பின் பிரச்சனைக்கான அடித்தளம், 1980-கள் முதலே தொடரும் தவறான கோட்பாட்டு அடிப்படையும், அதை நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்த தவறான தலைமையும்தான் என்பது எங்களது மதிப்பீடு.
மேலும், இந்திய சமூகம் பற்றிய ஆய்வை முடித்து முன் வைக்க வேண்டும் என்று அமைப்பு கொடுத்த வேலையை புறக்கணித்து 8 ஆண்டுகளாக மோசடி செய்ததற்கு 1, 2, 3 மற்றும் பிற தோழர்கள் அடங்கிய தலைமைக்குத்தான் கூட்டுப் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
இந்த மூவரில் 2 சென்ற ஆண்டு நடந்த பிளீனத்தில் 1, 3 மற்றும் பிறரால் தனிமைப்படுத்தப்பட்டு, அணிகள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டு, தலைமையிலிருந்து நீக்கப்பட்டார். அவரது தவறுக்கான தண்டனை என்று இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 1, 3 இருவரும் தமது தவறுகளை எல்லாம் பூசி மெழுகி விட்டு மீண்டும் தலைமையில் உட்கார்ந்து கொண்டனர்.
எனவே இந்தப் பிரச்சனைகளைப் பற்றிய பரிசீலனை தவிர்க்கவியலாமல் 1, 3 மீதான கடும் விமர்சனமாகவும், 2-ஐ, அவர்கள் தனிமைப்படுத்தி பலிகடாவாக்கியது பற்றி பேசுவதாகவும் அமைகிறது. அதனாலேயே தலைமையின் இந்தத் தவறுகளில் 2-ன் பொறுப்பை மறுத்து விடவில்லை.
இந்தப் புரிதலுடன் பின் வரும் கட்டுரையை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ம.க.இ.க தலைமை எப்படி தவறானது என்பதையும், இந்தத் தலைமையில் இருந்த நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் ஆகியோர் தாங்கள் தலைமைக்கே தகுதியற்றவர்கள் என்பதையும் தங்களது வாக்குமூலத்தின் மூலம், தெளிவுபடுத்தியுள்ளனர். அதன் மூலம் எங்கள் பணியை எளிமையாக்கிய அவர்களது செயலுக்கு, ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் கடிதத்தின் மூலம் மருதையன் மற்றும் நாதன், “ம.க.இ.க தலைமை ஜனநாயக மத்தியத்துவத்தை கடைப்பிடிப்பதில்லை”, “அணிகளின் ஜனநாயக உரிமைகளை மதிப்பதில்லை, அமைப்பை தமது சொத்தாக பார்ப்பவர்கள் தலைமையில் இருக்கின்றனர்”, “வறட்டு கவுரவத்துக்காக அமைப்பை சீர்குலைக்கின்றனர்”, “தனிநபர்கள் மீது அவதூறு சொல்வது, தனிமைப்படுத்தி ஒதுக்கி பழிவாங்குவது அமைப்புத் தலைமையின் வாடிக்கையாக உள்ளது” என்பதற்கான ஆதாரங்களை முன் வைத்திருக்கின்றனர்.
இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
மருதையன் தனது கடிதத்தில்,
“கார்ப்பரேட் காவி பாசிசம் அல்லது பார்ப்பன பாசிச அபாயத்தை அமைப்பிலிருக்கும் சில மூத்த தோழர்கள் மறுத்தனர். தங்களது எதிர்ப்பை எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதலாக மாற்றி, சமூக ஊடகங்களின் வாயிலாக அமைப்புக்கு எதிராக ஒரு “பதிலிப்போர்” நடத்தினர்.” என்றும்
“1. கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்தை ஆய்வின்றி சதித்தனமாக புகுத்தி விட்டேன்…
2. அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்து செல்கிறேன்…
3. நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும், திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன்…
4. அமைப்பின் மூத்த தோழர்களுக்கிடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன்…
5. கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன்…
6. மூத்தத் தோழர்களை வீழ்த்தி விட்டு, மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன் – என்பன எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றும் கூறுகிறார்.
அ. முதலாவதாக, “கார்ப்பரேட் காவி பாசிசம்” என்பது ஒரு அரசியல் முழக்கம் என்று அவரே கூறி விட்டார். இந்த அரசியல் முழக்கம் எவ்வாறு உருப்பெற்றது என்ற பின்னணியை பார்க்கலாம்.
“ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன பாசிச அபாயம் மிகவும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை முன்வைத்து, புதிய செயல்தந்திரம் வகுக்க வேண்டியது உடனடி அவசரப் பணியாக உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே செயல்தந்திரத்தை மாற்றியிருக்க வேண்டும் எனவும் கருதுகிறேன். அவ்வாறு செய்யாததால் அரசியல் களத்தில் பின்தங்கியுள்ளோம். ஏராளமான சக்திகளைத் திரட்டும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளோம் எனக் கருதுகின்றேன்!!”
இது தோழர் 1 கூறியுள்ளதாக, தோழர் 2 பதிவு செய்தது.1
அதாவது “கார்ப்பரேட் காவி பாசிசம்” என்ற அரசியல் முழக்கத்தின் பின் இருக்கும் கருத்து “ஆர்.எஸ்.எஸ், பார்ப்பன பாசிச அபாயம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதை முன்வைத்து புதிய செயல்தந்திரம் வகுக்க வேண்டியது உடனடி அவசரப் பணியாக உள்ளது, ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே செயல்தந்திரத்தை மாற்றி இருக்க வேண்டும்” என்பதாகும்.
இவ்வாறு ஒரு புதிய செயல்தந்திரத்தை வகுக்க வேண்டுமானால் தலைமை என்ன செய்திருக்க வேண்டும்?
செயல் தந்திரம் என்பது புறச்சூழல் அடிப்படையில் ஆய்வு செய்து தரவுகளை நிறுவி தீர்மானிப்பது; செயல்தந்திரம் என்பது எப்போதும் ஒரு சமயத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒன்றாத்தான் இருக்க முடியும் என்பது நாம் புரிந்துகொண்டுள்ள, ஏற்றுக்கொண்டுள்ள அமைப்புக் கோட்பாடாகும்.
எனவே, புதிய செயல்தந்திரத்தை கொண்டு வர வேண்டுமானால் இதுவரை நடைமுறையில் இருந்து வரும் செயல்தந்திரம் பற்றி ஆய்வு செய்து, அனுபவத்தைத் தொகுத்து, தரவுகளின் அடிப்படையில் அது பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அதாவது, ‘புதிய செயல்தந்திரம் ஒன்றை உடனடியாக வகுக்க வேண்டி இருக்கின்றது என்ற புறச்சூழல் ஏற்பட்டு விட்டது’ என்றால் அது என்ன என்பது பற்றி ஆய்வு செய்து நிறுவ வேண்டும். ஏற்கனவே ‘நடைமுறையில் இருந்து வரும் செயல்தந்திரம் தற்போது பொருந்தாது. அது காலாவதி ஆகி விட்டது’, என்றால் எந்த அடிப்படையில் அது காலாவதி ஆகி விட்டது என்பதை ஆய்வு செய்து நிறுவ வேண்டும். அதாவது, ஏற்கனவே இருக்கும் “கட்டமைப்பு நெருக்கடி புதிய தாக்குதல் செயல் தந்திரம்” எப்படி காலாவதி ஆகி விட்டது என்பதை ஆய்வு செய்து நிறுவ வேண்டும். புதிய செயல்தந்திரமான “காவி-கார்ப்பரேட் பாசிசம்” என்பது எப்படி முக்கியமான கண்ணியாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வு செய்து முன் வைக்க வேண்டும்.
செயல்தந்திரக் கோட்பாட்டின்படி ஒரு புதிய செயல்தந்திரத்தைத் தீர்மானிக்கின்றோம் என்றால் அதற்கான புதிய அமைப்பு வடிவங்களையும், புதிய போராட்ட முறைகளையும் புதிய முழக்கங்களையும் வகுத்து வைக்க வேண்டும்.
மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு “கட்டமைப்பு நெருக்கடி புதிய தாக்குதல் செயல்தந்திரம்” என்ற செயல் தந்திரத்தை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அது இப்போது இவர்கள் கூறும் இந்த கார்ப்பரேட் காவி பாசிசம் என்ற அரசியல் முழக்கத்திற்குப் பொருந்தாது. எனவே, இந்த புதிய செயல் தந்திரத்துக்கு பொருத்தமான புதிய அமைப்பு வடிவங்களும், புதிய போராட்ட முறைகளும், புதிய முழக்கங்களும் வகுத்து வைக்கப்பட வேண்டும்.
இத்தகைய ஆய்வுகளை எல்லாம் செய்த பிறகு, செயல்தந்திரம் பற்றி தீர்மானிப்பதை தலைமையால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அந்த அதிகாரம் இல்லை. பழைய செயல்தந்திரம் பற்றிய முடிவையும், புதிய செயல்தந்திரத்தைப் பற்றிய முடிவையும் முன் வைத்து புதிய அமைப்பு வடிவங்களையும், புதிய போராட்டங்களையும், புதிய முழக்கங்களையும் வகுத்து வைப்பதை ஒரு பிளீனத்தில் அல்லது மாநாட்டில்தான் தீர்மானிக்க முடியும்.
இது எதையும் செய்யாமல், செயல் தந்திரத்தை மாற்றுவதற்கு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமலே, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் “கார்ப்பரேட் காவி பாசிசம்” என்ற தலைப்பில் இரண்டு மாநாடுகளை நடத்தியது அணிகளின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகும். அரசியல் அமைப்புக் கோட்பாட்டை மீறி, அதை மதிக்காமல் தலைமையில் உள்ள சில குறிப்பிட்ட நபர்கள் தான்தோன்றித்தனமாக, சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் நடைமுறை ஆகும். எதிரிகளை கார்ப்பரேட் – காவி பாசிசம் என்று கூறிக் கொண்டே அவர்களுக்கு ஈடாக – இணையாக இவர்கள் – இந்தத் தலைமை பாசிஸ்டுகளாக இருக்கின்றார்கள் என்பதே ஆகும்.
முந்தைய தலைமையில் பெரும்பான்மை என்று கூறப்பட்டவர்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக மருதையனும் சேர்ந்துதான் உரிய ஆய்வின்றி, தரவுகள் இன்றி சதித்தனமாக அணிகளின் ஜனநாயக உரிமைகளை மறுத்து, அமைப்புக் கோட்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு மருதையன், நம்பர் 1 உட்பட அனைவரும் சேர்ந்து செய்யும் அமைப்பு விரோத செயல் அம்பலமாவதில் இருந்து தப்பித்துக் கொள்ள, உத்தமர் வேடம் போடுவதின் ஒரு பகுதிதான் மருதையன் குழுவினரின் விலகல் நாடகம்.
ஆ. “அருந்ததி ராய், ஆனந்த் தெல்தும்டெ ஆகியோர் வழியில் காங்கிரசு – திமுக- வுக்கு ஆதரவாக அமைப்பை இழுத்துச் செல்கிறேன்” என்று தன் மீது குற்றச்சாட்டுவதாகக் கூறுகிறார், மருதையன்.
இப்படி இவர் மீது குற்றச்சாட்டு கூறுவது இருக்கட்டும். இப்போது நாங்கள் கேட்கின்றோம். ஏற்கனவே தி.மு.கவைப் பற்றி அமைப்பின் நிலைப்பாடு என்னவோ, அந்த நிலைப்பாட்டில் தலைமை தற்போது இல்லை. இதற்கு என்ன அடிப்படை?
ஏற்கனவே, “தி.மு.கவினர் அந்தக் கட்சியின் துவக்கக் காலத்தில் இருந்தது போல் இல்லை. ஏராளமாக சொத்து சேர்த்து தாமே ஒரு முதலாளித்துவ சக்திகளாகி விட்டனர். ஆசியக் கண்டத்திலேயே 7-வது பணக்காரன். இந்த தி.மு.க கட்சியானது போனபார்டிஸ்ட் கட்சி. அதாவது பிழைப்பு வாதக் கட்சி” என்று அம்பலப்படுத்தி வந்தோம்.
ஆனால், இன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க நமது செயல்பாட்டினால்தான் ஜெயித்தது என்று பெருமையாகப் பேசுகின்றோம். அந்த அளவுக்கு நமது செயல்பாட்டை மாற்றியுள்ளோம் என்றாகிறது. இதற்கு அடிப்படை என்ன?
தி.மு.க பற்றிய நிலைப்பாட்டை மாற்றியதற்கும், அருந்ததி ராய், ஆனந்த் தெல்டும்டே ஆகியோரை அழைத்து வந்ததற்கும் பின் இருக்கும் செயல் தந்திரம் குறித்து அணிகளுக்கு பயிற்சி கொடுத்திருக்க வேண்டாமா? தலைமை ஒரு கருத்துக்கு வந்து விட்டால் அல்லது ஏற்கனவே இருந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டுக்கு வந்து விட்டால் அதை அணிகளுக்கு முறையாக அறிவித்து, பயிற்றுவிக்காமல் எப்படி அவர்களை அழைத்துச் செல்ல முடியும். நீங்கள் எடுக்கும் புதிய நிலைப்பாடு சரியா, தவறா என்பது வேறு விவகாரம். அது பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அம்சம். ஆனால் நீங்கள் – தலைமை- அணிகளிடம் இருந்து உயிரோட்டமான உறவை முறித்துக் கொண்டு, வேறு நிலைப்பாட்டுக்குப் போவது என்பது அணிகளின் ஜனநாயகத்தை மறுப்பது இல்லையா?
ஒட்டு மொத்தத் தலைமையின் நேர்மை இன்மையும் (ஜனநாயக மறுப்பும்) இப்படித்தான் இருக்கிறது. இதில் மருதையன் தனியாக காங்கிரசுக்கு, தி.மு.கவுக்கு அமைப்பை இழுத்துச் செல்கிறார் என்ற நாடகம் வேறு எதற்கு? இதில் மருதையனைத் தவிர மற்றவர்கள் தலைமையில் இருந்து கொண்டு விரல் சூப்பிக் கொண்டு இருக்கிறார்களா என்ன?
இ. “அமைப்பின் மூத்தத் தோழர்களுக்கு இடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன்” என்ற குற்றச்சாட்டு…
இந்த வாதத்தின் உள்ளடக்கம் பற்றி : இவர் (மருதையன்) மிகத் திறமைசாலி போலவும் மற்றவர்கள் 1, மற்றும் 2 என்பவர்கள் திறமையற்றவர்கள் போலவும், இவர் தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்வது போலத்தான் இவர் கூறும் இந்த வாதம் உள்ளது.
ஆனால் இந்த மருதையன் என்பவரும், நம்பர் 1 என்பவரும் உண்மையிலேயே கைதேர்ந்த கிரிமினல்கள். அதனால்தான் சென்ற ஆண்டு நடந்த பிளீனத்தில், தலைமையாக இவர்கள் மூவரும் கூட்டாக செய்த தவறுகளையெல்லாம் தோழர் 2-ன் மீது மட்டும் சுமத்தினர்; இவர்களால் முறையாக அமைப்பு, அரசியல், சித்தாந்த ரீதியாக பயிற்றுவிக்கப்படாத அணிகளின் சிந்தனையை சதித்தனமாக திசை திருப்பினர்; 2009-ல் முடிவு செய்தபடி தாம் ஆய்வு செய்து முடிக்காமல் போனதற்கு தோழர் 2 மட்டுமே காரணம் என்று அவர்மீது மட்டும் பழியைப் போட்டனர்; அணிகளின் கோபத்தை எல்லாம் 2-ன் மீது மட்டும் சுமத்தினர்; தமது பொறுப்பை தட்டிக் கழித்தனர். இப்படி 2-ன் மீது பழிசுமத்தி, அணிகள் தோழர் 1 சார்ந்திருந்த பெரும்பான்மைக்கு ஓட்டுப் போட ஏற்பாடு செய்து கொண்டனர்.
இதற்கு இரண்டு முக்கியமான உத்திகளை கடைப்பிடித்தார்கள்.
முதலாவதாக, ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமாக தலைமைக் குழுவுக்குள் தங்களை பெரும்பான்மை என்று அணிகள் மத்தியில் முன் நிறுத்திக் கொண்டார்கள். ஆய்வு நடைபெறாதது குறித்து விசாரிப்பதற்காக தலைமையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரித்து தொகுத்துக் கொடுத்த, அதன் அறிக்கையை பெரும்பான்மை நிராகரிக்கிறோம் என்று ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிராக அறிவித்தார்கள்.
தலைமை ஆய்வுப் பணியை செய்து முடிக்கத் தவறியது பற்றி விசாரிக்க விசாரணைக் குழு அமைத்தது, அதன் அறிக்கையை தலைமையில் ‘பெரும்பான்மை’ நிராகரித்தது பற்றி தெளிவாக புரிந்து கொள்வோம்.
1. ஆய்வு செய்யாமல் தவறு செய்து விட்டார்கள் என்ற விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் – குற்றம் சாட்டப்பட்டவர்களே 1, 2 3 மூன்று பேரும் உள்ளிட்ட முந்தைய தலைமை; ஆனால், அவர்களே நீதிபதிகளை நியமித்து ஒரு விசாரணைக் குழு அமைக்க முடியாது.
2. அப்படியே விசாரணைக் குழு அமைத்து விட்டார்கள். அந்தத் தவறுக்குப் பிறகும் தலைமை அதை அமைப்புக் கோட்பாட்டின்படி கையாளவில்லை. விசாரணைக் குழு அமைத்து அது விசாரித்து தனது அறிக்கையை தலைமைக்குக் கொடுத்தது. இந்த அறிக்கையை அணிகளுக்கு சுற்றுக்கு விட்டு, பிளீனத்தில் விவாதித்து முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் தலைமை அமைப்பின் ஏகமனதான முடிவு.
3. இப்படி தலைமை மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக, தலைமையின் ஏகமனதான முடிவின்படி நியமிக்கப்பட்டு, தரப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையை நிராகரிப்பதற்கு தலைமையில் உள்ள ஒரு பிரிவுக்கோ அல்லது அதில் உள்ள ஒருவருக்கோ உரிமை இல்லை என்பதுதான் அமைப்புக் கோட்பாடு.
4. இந்தத் தலைமை 2010-ல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட தலைமை, இதில் பெரும்பான்மை என்றோ, சிறுபான்மை என்றோ தம்மை இரு அணியாக பிரித்துக் கொண்டு வெளியில் அறிவிப்பதற்கு எந்த அதிகாரமும், உரிமையும் இவர்களுக்கு இல்லை என்பதே அமைப்புக் கோட்பாடு.
5. ஆய்வுப் பணியை முடிக்காததற்கு யார் பொறுப்பு என்ற பிரச்சனையை தலைமையால் தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியாததால்தான், விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு விசாரித்து தொகுத்துக் கொடுக்கும் அறிக்கையை அணிகளுக்கு சுற்றுக்கு விட்டு பிளீனத்தில் முடிவு செய்யலாம் என்று தலைமையில் ஏகமனதாக முடிவு செய்யப்படுகிறது.
6. ஆக இவர்களைப் பற்றிய, தலைமையின் செயல்பாட்டைப் பற்றிய அறிக்கையை விவாதித்து முடிவு செய்ய பிளீனத்திடம் ஒப்படைத்து விட்ட பிறகு, அதன் மீது கருத்து கூறவோ, பெரும்பான்மை, சிறுபான்மை என்று அறிக்கை தயாரித்து வெளிடவோ, இந்தத் தலைமைக்கு உரிமை இல்லை என்பதே அமைப்புக் கோட்பாடு.
7. பிளீனத்தில் அணிகளுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அந்த அளவு உரிமை மட்டுமே இந்தத் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கும் உண்டு. இதை விட்டு, விட்டு நாங்கள் பெரும்பான்மை என்பதும் 2 சிறுபான்மை என்பதும் அணிவாதமாகும். அணி சேர்த்துக் கொண்டு 2-ஐ ஓரம் கட்டி ஒதுக்கியதும், ஒழித்துக் கட்டியதும் மாபெரும் சதிச் செயலாகும்.
8. தாங்கள் பெரும்பான்மை என்று கூறிக் கொண்டு விசாரணைக் குழு தொகுத்துக் கொடுத்த அறிக்கையை நிராகரித்தது பற்றி : பெரும்பான்மை, சிறுபான்மை என்பது மோசடி, சதித்தனம். ஆனால், பெரும்பான்மை, சிறுபான்மை என்பதை ஒரு பேச்சுக்காக நாம் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.
பெரும்பான்மை என்பவர்கள், அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்து விட்டார்கள். பெரும்பான்மை ஒன்றை நிராகரித்து விட்டால், அது அமைப்பின் முடிவு ஆகி விடுகின்றது. அது சட்டம், விதி ஆகி விடுகின்றது. நிராகரிக்கப்பட்டு விட்ட அம்சம் நடைமுறைக்குப் போகாது. அமைப்புக் கோட்பாட்டின்படி நடைமுறைக்குப் போக முடியாது. பெரும்பான்மைக்கு, சிறுபான்மை கட்டுப்பட்டு அது அமைப்பு சட்டம் ஆகி விடுகிறது. அமைப்பு விதிகள் அப்படி இருக்கும் போது நிராகரிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையை மீண்டும் எப்படி பிளீனத்தில் வைக்க முடியும்? இது ஒரு மாபெரும் சதித்தனம், இதன் நோக்கம் தாங்கள் ஜனநாயகமாக நடந்து கொள்வது போன்ற ஒரு தோற்றத்தை அணிகளிடம் ஏற்படுத்தி மோசடி செய்வதுதான்.
பெரும்பான்மை நிராகரித்து விட்டது என்பதால் பெரும்பான்மை கருத்துதான் சட்டம், விதியாகும் என்பதால் அணிகளில் பெரும்பான்மையினர்- தலைமையிலுள்ள பெரும்பான்மையினரின் தீர்ப்பை ஒட்டி, விசாரணைக் குழுவின் அறிக்கையை, அதாவது பிளீனம் துவங்குவதற்கு முன்பாகவே அணிகள் பூராவும் விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்து விட்டனர்.
9. பெரும்பான்மை என்று கூறப்பட்டவர்கள், அதாவது மருதையன், நம்பர் 1 என்று அறியப்பட்டவர் இருவரால் கட்டமைக்கப்பட்ட பெரும்பான்மை செய்துள்ள இன்னொரு சதிச் செயலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிளீனத்தை நடத்தி உடனடியாக ஒரு தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அணிகளிடம் கருத்துக் கோரி விட்ட சுற்றறிக்கையில் பல விவகாரங்கள் பேசப்படுகிறது. இது எல்லாமே நேர்மையற்ற செயல். அதில் ஒன்றை- சதிச் செயலை- மட்டும் குறிப்பிடுகிறோம்.
“மூன்று முறை கால நீட்டிப்புக்குப் பிறகு இறுதியாக ஒரு தேதி குறிப்பிட்டு ஆய்வை முடிக்க அமைப்புக்கு நாம் உறுதியளித்துள்ளோம். ஆய்வுப் பணியோ அல்லது வேறு எந்தப் பணியாக இருந்தாலும் குறித்த கால இலக்கில் வேலையை நிறைவேற்றி ஒப்படைக்க வேண்டும். அது நடக்காத பட்சத்தில் அந்த வேலை எவ்வளவு நடந்திருக்கிறதோ அந்த அளவில் உரிய அமைப்பி்ல் சமர்ப்பிக்க வேண்டும். வேலையை முழுமையாக முடிக்க தவறியமைக்கான விளக்கம், சுயவிமர்சனம் ஆகியவை அத்துடன் அளிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தோழர்கள் தாங்கள் செய்து முடித்துள்ள வேலை எதையும் மா.அ.க-விடம் ஒப்படைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.2
இந்த வாதம் திட்டமிட்டே கிரிமினல் தனமாக, சதித்தனமாகக் கூறப்படும் வாதம். உண்மைக்குப் புறம்பாகக் கூறப்படும் வாதம்.
ஆய்வுக்குழு ஆய்வு நடந்து முடிந்த அளவுக்கு, அதை பென்டிரைவில் பதிவு செய்து செயலரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், செயலர் இதைத் தலைமைக்குழுவில் வைக்கவில்லை. இருட்டடிப்பு செய்து விட்டார். சுற்றறிக்கையை அணிகளுக்கு விடும் போதும், இந்த ஆய்வு பற்றி, அதை பென்டிரைவில் கொடுத்தது பற்றி கூறவில்லை. மாறாக “ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தோழர்கள் தாங்கள் செய்து முடித்துள்ள வேலை எதையும் தலைமையிடம் ஒப்படைக்கவில்லை” என்று திட்டமிட்டே பொய்யை சுற்றறிக்கையில் அனுப்பியிருக்கின்றனர். இதன் மூலம் ஆய்வுக்கு பிரதான பொறுப்பு எடுத்து இருந்த 2-ன் மீது அணிகள் அனைவரின் கோபத்தையும் திருப்பி விட்டு விட்டார், செயலர்.
பிளீனத்திற்கான அறிக்கை என்று, தலைமையின் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையுடன், பெரும்பான்மை, சிறுபான்மை ஆகிய அறிக்கைகளையும் வெளியிட்டனர். அதில் பெரும்பான்மை அறிக்கை என்பதில் தோழர் 2-ஐ பற்றி தனிநபர் ஆவேசத்தைக் கொட்டி இருந்தனர். அதாவது ஆய்வை 2-தான் செய்யவில்லை என்று பெரும்பான்மை அறிக்கையில் கூறியிருந்தனர்.
அடுத்து, சுற்றறிக்கையில் ஆய்வுக் குழு கொடுத்த ஆய்வை (பென் டிரைவ் பதிவை) அணிகளுக்குக் காட்டாமல் மறைத்து விட்டார் செயலர். இப்படி இரண்டு முறைகளிலும் 2-ன் மீது அணிகளின் கோபத்தை ஏவி அனைத்து சிக்கலுக்கும் (ஆய்வு நடக்காமைக்கு) 2 மட்டும்தான் காரணம் என்று பிளீனம் துவங்குவதற்கு முன்பே அணிகளிடம் கருத்துருவாக்கம் செய்து அதன் மூலம் ‘பெரும்பான்மை’ என்ற தமது கருத்துக்கு ஆதரவாக அணிகள் ஓட்டுப் போடுவதை உறுதி செய்து கொண்டனர்.
10. மேலும், விசாரணைக் குழு அறிக்கையை பெரும்பான்மை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் விசாரணைக் குழு அறிக்கைக்கு ஓட்டுப் போடாமல் பார்த்துக் கொண்டனர். கடைசியாக எஞ்சி இருப்பது பெரும்பான்மை அறிக்கைதான். அதை அணிகள் அனைவரும் ஏற்றுக் கொள்வதாகச் செய்து விட்டனர்.
இது மாபெரும் கிரிமினல் சதித்தனம். இந்தப் பெரும்பான்மை எனப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அளவிலான, அமைப்பை ஏமாற்றி சிதைத்த கிரிமினல் குற்றம் அது.
இதில் “மூத்த தோழர்களுக்கு இடையே கலகத்தை மூட்டி பிரித்து விட்டேன்” என்று குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறுகிறார், மருதையன். நாங்கள் என்ன கூறுகின்றோம் என்றால், மருதையன் உள்ளிட்ட, பெரும்பான்மை என்பவர்கள்தான் 2-ஐ மட்டும் தவறு செய்தவராக ஓரம் கட்டி பிரித்து விட்டார்கள்.
ஈ. “கீழைக்காற்றை மூடுவதற்கு சதி செய்தேன்” என்பது தன் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு என்று மருதையன் கூறுகிறார். இதுவே இந்த அமைப்பு செயல்படும் முறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
கீழைக்காற்று வெளியீட்டகம் மூடப்பட்டது பற்றி இதுவரையில் அமைப்பின் சார்பில் அதிகாரபூர்வமாக பொதுவில் வினவு தளத்திலோ, அமைப்பு பத்திரிகைகளிலோ எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்ற 2019-ம் ஆண்டின் மத்தியிலிருந்து வினவு தளத்தில் வெளியிடப்படும் புத்தக அறிமுகக் கட்டுரைகளில் கீழைக்காற்று வெளியீட்டகம் நீக்கப்பட்டிருந்தது. மேலும், நெற்குன்றம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த கீழைக்காற்றின் புத்தகக் கடையும் மூடப்பட்டிருந்தது.
“நட்டம், நடத்துவதற்கு ஆகும் பொருட் செலவு போன்றவை பெரும் சுமையாக ஆகிறது. தத்துவத்துறையில் அதன் பங்களிப்பு தேவை என்ற போதிலும் அதைத் தொடர்ந்து நடத்துவது பொருளாதார சிக்கலுக்குள் தள்ளி விடும் என்பதால் அதை ஆன்லைனில் மட்டும் நடத்திக் கொள்ளலாம்” என்று அமைப்புக்குள் மட்டும் சுற்றறிக்கை விட்டு மூடியிருக்கிறார்கள்.
ஆனால், 2020 ஜனவரி மாதம் நடந்த புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் முகமாக அறியப்பட்டவரும், அதனை உருவாக்கி வளர்த்துச் சென்றவருமான தோழர். துரை சண்முகம் “கீழடி பதிப்பகம்” என்ற பெயரில் தனியாக ஒரு அரங்கை போட்டிருந்தார். அதே நேரம் கீழைக்காற்று வெளியீட்டகம் அரங்கும் அங்கே போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ம.க.இ.க.வோ, மருதையனோ, துரை சண்முகமோ கீழைக்காற்று வாசகர்களுக்கும் சரி, ம.க.இ.க ஆதரவாளர்களுக்கும் சரி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
கீழைக்காற்று விவகாரத்தில் நமக்குத் தெரிவதெல்லாம் துரை சண்முகம் அதிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதை மூடுவது என்ற முடிவை அவர் எதிர்த்ததால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் கீழடி பதிப்பகம் என்று தொடங்கிய உடன் ஏட்டிக்குப் போட்டியாக கீழைக்காற்றுக்கு மீண்டும் உயிர் கொடுத்து புத்தகக் கண்காட்சியில் இணைத்திருக்கின்றனர்.
இப்போது மருதையன், தன் மீது கீழைக்காற்றை மூட சதி செய்ததாக குற்றம் சாட்டினார்கள் என்கிறார். ஆனால் இதற்கு மேல் எந்த விளக்கமும் சொல்ல மறுக்கின்றனர்.
மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் இந்தத் தலைமை அமைப்பினர் எந்த வித பொறுப்பும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், மூடு மந்திரமாக செயல்படுவது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம். மருதையன் தனது கடிதத்தை வெளியிட்டு 3 வாரங்களுக்குப் பிறகும் அது தொடர்பாக தலைமையிடமிருந்து முறையான விளக்கமோ, மறுப்போ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது இதனை இன்னும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
உ. “நாடார் வரலாறு கருப்பா காவியா என்ற நூல் வெளியீடு மற்றும் விற்பனையை ஊக்குவித்ததன் மூலம் சாதி அரசியலையும், திராவிட அரசியலையும் மறைமுகமாக ஊக்குவிக்கிறேன்.” என்பது தன் மீது தனது எதிரிகள் வைக்கும் குற்றச்சாட்டு என்கிறார் மருதையன்.
நூல் வெளியீடு மற்றும் விற்பனையை மருதையன் எப்படி ஊக்குவித்தார்? அதில் சாதி அரசியலும், திராவிட அரசியலும் இருந்ததாக சொன்னவர்கள், எந்த அடிப்படையில் அதைச் சொன்னார்கள்? அதற்கு மருதையனின் பதில் என்ன? இப்படி எந்த விபரமும் இல்லாமல் ஏதோ கர்ப்பகிருகத்தில் குருக்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது போல புரியாதபடி பேசி நம்மை ஏமாற்றுகிறார் மருதையன்.
ஊ. “மூத்த தோழர்களை வீழ்த்தி விட்டு மொத்த அமைப்பையும் கைப்பற்ற முயற்சிக்கிறேன்” என்று தன் மீது குற்றம் சாட்டுவதாகக் கூறுகிறார், மருதையன். மருதையனும், 1-ம்தான் 1, 2, 3 அடங்கிய தலைமை செய்த பாரிய தவறின் சுமை தம் மீது விழுவதை தவிர்ப்பதற்காக, திட்டமிட்டே தலைமைக்குள் பெரும்பான்மை என ஒரு அணியை உருவாக்கிக் கொண்டு தோழர் 2ஐ மட்டும் ஓரம் கட்டி கிரிமினல் சதி வேலை செய்து ஒழித்து விட்டார்கள்.
தற்போது “தாம் செய்த கிரிமினல் சதி வேலையைப் போலவே, மருதையனும் செய்து தன்னை ஒழித்து விட்டு தலைமையைக் கைப்பற்றி விடுவாரோ என்று நம்பர் 1 அச்சப்பட்டிருக்கலாம். மருதையனும், 1-ம் சேர்ந்து 2-ஐ ஒழித்துக் கட்டியதில் தோழர் மருதையனின் கிரிமினல் செயல்பாட்டைப் பார்த்து அவர் அச்சப்பட்டிருக்கலாம். அதனால் நம்பர்-1, 2-டன் சேர்ந்து கொண்டு மருதையனுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். இவற்றைப் பற்றி நம்பர் 1-ஐ அவரைக் கேட்டால்தான் தெரியும்.
மருதையன் தன் மீது வைக்கப்படுவதாக பட்டியலிட்டிருக்கும் விவகாரங்கள் எல்லாம், ஏதோ ஹாலிவுட் மாஃபியா திரைப்பட சூழ்ச்சிகள் போல மூடு மந்திரமாக, கட்டைப் பஞ்சாயத்து குற்றக் கும்பலின் செயல்களை போன்று வெளியில் தெரிகிறதே தவிர, ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பிற்கு உகந்த ஜனநாயக முறைப்படி அவை முன் வைக்கப்படவில்லை; அவை அவ்வாறு கையாளப்படவுமில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
– ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு
1 சென்ற வருடம் (2019) நடந்த பிளீனத்திற்கு முன் வைத்த அறிக்கைகளில் விசாரணைக் குழுவின் அறிக்கையின் மீது தோழர் 2-ன் கருத்துக்கள் என்ற அறிக்கையில் இணைப்பு 1-ல் பிளீனத்தை உடனடியாக நடத்துவது பற்றி என்ற தலைப்பில்.
2 பிளீனம் நடத்துவது பற்றிய சுற்றறிக்கை
மூன்றாவது கடிதம் (“ஆளுக்கொரு நீதி என்ற மனு தருமம்தான் ம.க.இ.க-வின் அமைப்பு முறையா?”) ஓரிரு நாட்களில் வெளியாகும்….
One reply on “மருதையன் உள்ளிட்ட ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் செயல்பாடுகள்”
[…] 24-2-2020 அன்று வினவு தளத்தில் நண்பர்கள் மருதையன் மற்றும் நாதன் அவர்கள் வெளியிட்ட கடிதங்கள் தொடர்பாக ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது கடிதம். (முதல் கடிதம் – அரசியல் தோல்வியை மறைக்க நாடகமாடும் மருதையன் முதலான ம.க.இ.க தலைவர்கள் இரண்டாவது கடிதம் – ம.க.இ.க தலைமையின் மாஃபியா ஸ்டைல் அமைப்…) […]
LikeLike